பீலா ராஜேஷை மனம் திறந்து பாராட்டிய ப.சிதம்பரம்..! நம்பிக்கை அளிக்கிறார்

By karthikeyan VFirst Published Apr 4, 2020, 7:49 PM IST
Highlights

கொரோனா தமிழ்நாட்டில் கோர முகத்தை காட்டிக்கொண்டிருக்கும் நிலையில், தினமும் செய்தியாளர்களை சந்தித்து தொடர்ந்து கொரோனா குறித்து அப்டேட் செய்துகொண்டிருக்கும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை ப.சிதம்பரம் மனதார பாராட்டியுள்ளார்.
 

கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தினம் தினம் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மிகக்குறைவாகவே இருந்த கொரோனா பாதிப்பு, டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்டவர்களை பரிசோதிக்க தொடங்கிய பின்னர், மின்னல் வேகத்தில் உயர்ந்தது. 

கடந்த 4 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 361. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 485. தமிழ்நாட்டில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எகிறி கொண்டிருக்கும் நிலையில், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களை கண்டறிந்து அவர்களை பரிசோதித்து சிகிச்சையளிப்பதுடன், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதிக்கும் பணிகளையும் தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக மேற்கொண்டுவருகிறது.

மிகவும் சவாலான இந்த பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டுவரும் தமிழக சுகாதாரத்துறையும் மற்ற துறையினரும் கொரோனாவை தடுக்க தீவிரமாக உழைத்துவருகிறது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினம் தினம் உச்சம் தொட்டாலும், கொரோனா குறித்த அப்டேட்டுகளையும் அரசு மேற்கொண்டுவரும் தடுப்பு பணிகளையும் தினமும் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தவறுவதேயில்லை.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயங்கி ஒதுங்காமல் தினமும் மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து, கொரோனா பாதிப்பு மற்றும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு பணிகளை புள்ளிவிவரத்துடன் விளக்கமாகவும் தெளிவாகவும் தெரிவித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கொரோனா தொற்று இருந்தாலும் காப்பாற்றிவிடலாம் என்றும் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையளித்து வருகிறார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் செயல்பாடுகளை கண்டு மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், பீலா ராஜேஷை மனதார வெகுவாக பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும்  தினமும் ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது பாராட்டுக்குரியது என்று ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.
 

தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளர் தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது!

— P. Chidambaram (@PChidambaram_IN)
click me!