சிபிஐ காவலை விரும்பி ஏற்றுக் கொண்ட ப.சிதம்பரம் ! திஹாரை தவிர்க்க அதிரடி யோசனை !!

By Selvanayagam PFirst Published Aug 30, 2019, 9:45 PM IST
Highlights

திஹார் சிறையில் அடைக்கப்படுவதைத் தவிர்க்க வரும் திங்கட்கிழமை வரை சிபிஐ காவலில் இருக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பு ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 23 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ப.சிதமபரத்தை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. கடந்த 9 நாட்களாக ப.சிதம்பரம் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 நாட்களுக்கு சிபிஐ காவல் டெல்லி நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரத்தை, முதலில் 4 நாட்களும், பிறகு 5 நாட்களும் சிபிஐ., காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், அவருக்கு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட காவல் இன்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் ப.சிதம்பரம் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிதம்பரத்தை மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. புதிதாக கிடைத்துள்ள விவரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் சிதம்பரத்திடம் விசாரிக்க வேண்டியுள்ளது என்று சிபிஐ கூறியது.

ஆனால் மேலும் 5 நாள் காவல் கோர சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், சிபிஐ காவலில் அனுப்பப்பட்டதற்கு எதிரான மனு வரும் திங்கள் அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பதால், அதுவரை சிபிஐ காவலில் இருக்கத் தயார் என்று ப.சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து ப.சிதம்பரத்தை மேலும் 3 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கினார்.

click me!