தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் பிற மாநிலங்களுக்கு பிராண வாயு.. மத்திய அரசுக்கு CPM கண்டனம்.

Published : Apr 26, 2021, 12:35 PM IST
தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல்   பிற மாநிலங்களுக்கு பிராண வாயு.. மத்திய அரசுக்கு CPM கண்டனம்.

சுருக்கம்

தமிழகத்தில் உள்ள கட்டமைப்பே மக்களை பாதுகாப்பதற்கு உதவி வருகிறது. ஆனால், தமிழகத்தில் உற்பத்தியாகும் மருத்துவ பிராண வாயுவை பிற மாநிலங்களுக்கு திருப்பி விடும் நடவடிக்கையை மத்திய அரசு தன்னிச்சையாக மேற்கொள்வதாக செய்திகள் காட்டுகின்றன

தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் பிராண வாயுவை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய அரசின் எதேச்சதிகார நடவடிக்கைக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. வரும் மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் இன்னும் நிலைமை மோசமடையும் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. இந்த காலகட்டத்தில் மிக அதிகமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் வரக்கூடும். கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு, அதிகமான நோயாளிகளுக்கு பிராண வாயு தேவையை உருவாக்குகிறது என செய்திகள் காட்டுகின்றன. வட மாநிலங்கள் பலவற்றிலும் மருத்துவமனை மற்றும் பிராண வாயு கட்டமைப்புகள் இல்லாததால் கொரோனா சிகிச்சை தருவதிலும், இதர நோய்களுக்கு சிகிச்சை தருவதிலும் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் உள்ள கட்டமைப்பே மக்களை பாதுகாப்பதற்கு உதவி வருகிறது. ஆனால், தமிழகத்தில் உற்பத்தியாகும் மருத்துவ பிராண வாயுவை பிற மாநிலங்களுக்கு திருப்பி விடும் நடவடிக்கையை மத்திய அரசு தன்னிச்சையாக மேற்கொள்வதாக செய்திகள் காட்டுகின்றன. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் திருப்பிவிடுவதை எதிர்த்துள்ள தமிழக முதலமைச்சர், தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசு இதுபோன்ற விசயங்களில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, பாதிப்பை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதோடு, மாநில அரசின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மாறாக எதேச்சதிகாரமாக பிராண வாயுவை பிற மாநிலங்களுக்கு திருப்பி விடும் மோடி அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

எனவே, தமிழக அரசிடமிருந்து கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பிராண வாயுவை திருப்பி விடக் கூடாது எனவும், தமிழகத்தின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக முதலமைச்சர் கூடுதலாக கேட்டுள்ள பிராண வாயுவை உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!