
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பல இடங்களில் அமோக வெற்றி பெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில் அவரை கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர். இதேபோல் திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, ஆடிப்பாடி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தம் 12601 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன, பின்னர் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் அகற்றப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . வழக்கம்போல சென்னை திமுகவுக்கு தான் என்பது ஓரளவுக்கு உறுதியாகி விட்டது, அதேபோல் அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் திமுகவே ஆதிக்கம் செலுத்தி வருவதை காணமுடிகிறது.
இந்நிலையில் அசாதுதீன் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி தமிழகத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டில் மஜ்லீஸ் கட்சி சார்பில் பட்டம் சின்னத்தில் போட்டியிட்ட நபிலா வக்கீல் அஹமது வெற்றி பெற்றுள்ளார்.