7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.. இதில் அதிமுக நாடகம் போடவில்லை.. அமைச்சர் பதிலடி.

By Ezhilarasan BabuFirst Published Feb 5, 2021, 12:23 PM IST
Highlights

ஆளுநர் இதை நிராகரிக்கவில்லை. குடியரசு தலைவரே ஆளுநரைவிட அதிகாரம் படைத்தவர், பல முறை ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலையில் குடியரசு தலைவர் நல்ல முடிவை எடுப்பார்.

7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலை என்றும், திமுக போல் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடவில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு செல்வதற்கு முன்னதாக அவர் இவ்வாறு கூறினார். 

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை செப்டம்பர் 9, 2018 இல் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை 29 மாத கால தாமதத்திற்குப் பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்து இருக்கின்றார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரத்தில், ஏழு தமிழரின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரே முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த தகவல் தமிழ்தேசிய ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஆளுனரின் இந்த முடிவை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து ஏழு பேர் விடுதலையில் நாடகம் நடத்தி வருவதாக கண்டன குரல்கள் எழுந்துள்ளன இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு செல்வதற்கு முன்னதாக , சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 7 பேரை விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலை, திமுக போல் இந்த விவகாரத்தில் நாங்கள் இரட்டைவேடம் போடவில்லை என்றார். 

ஆளுநர் இதை நிராகரிக்கவில்லை. குடியரசு தலைவரே ஆளுநரைவிட அதிகாரம் படைத்தவர், பல முறை ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலையில் குடியரசு தலைவர் நல்ல முடிவை எடுப்பார். குடியரசு தலைவர் அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிகாரம் படைத்தவர் , மாநில அரசின் உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம். ஏற்கனவே பேரவையில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இது குறித்து முடிவு செய்ய வேண்டியவர் குடியரசு தலைவர்தான் என்று அமைச்சர் கூறினார். 

click me!