உள்ளாட்சித் தேர்தலிலும் ஓட்டுகளை விலைக்கு வாங்கும் நாடு எங்கள் தமிழ் நாடு.. கவிதை பாடிய டாக்டர் ராமதாஸ்.!

By Asianet TamilFirst Published Oct 8, 2021, 8:38 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்கள், பணம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கவிதை பாடியிருக்கிறார்.
 

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக  நாளை ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் டாக்டர் ராமதாஸ் ’வாழ்க ஜனநாயகம் வளர்க பஞ்சாயத்து ராஜ்’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள கவிதைப் பாணியிலான பதிவு இது:
பாருக்குள்ளே நல்ல நாடு... எங்கள் பாரத நாடு,
உள்ளாட்சித் தேர்தலிலும் ஓட்டுகளை விலைக்கு
வாங்கும் ஜனநாயக நாடு.... எங்கள் தமிழ்நாடு!
இதுபோன்றதொரு நாடு இந்த உலகில் வேறெங்குமில்லை!

அழுத்திச் சொல்றேன் கேளுங்க.... அடிச்சும் சொல்றேன்
கேளுங்க.... எங்கள் நாடு ஜனநாயகம் மிளிரும் நாடு!
ஓட்டுக்கு பரிசு தருவதில் விண்ணை முட்டும் நாடு!
நம்பவில்லை என்றால் நான் சொல்லும் பட்டியலைக் கேளுங்க!

ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி தான்
உள்ளாட்சி அமைப்புகளில் மிகச்சிறிய பதவி.
ஆனால், அந்த பதவிக்கு ஓட்டுப்போட எங்க ஊரில்
வாரி இறைக்கப்படும் பரிசுகளோ, ரொம்பப் பெருசுங்க
அதைப் பட்டியல் போட இந்தப் பக்கம் ரொம்ப சிறுசுங்க!

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மூட்டை மாட்டுத் தீவனம்
மனிதர்களுக்கு ஒரு மூட்டை சாப்பாட்டு அரிசியும் இலவசம்
ஒரு வாரம் மகிழ்ந்திருக்கவும், களைப்பு தீரவும் தினமும் ஒரு குவார்ட்டர்
இவற்றுடன் போனசாக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்நோட்டுகளும் உண்டு.
இவ்வளவு பரிசுகளும் மேயர் பதவிக்கு இல்லைங்க வார்டு மெம்பர் பதவிக்கு!

வார்டு உறுப்பினர் பதவிக்கு அடுத்த பதவி பஞ்சாயத்து தலைவர் பதவி
ரியல் எஸ்டேட் செழிக்கும் ஊர்களில் இப்பதவிக்கு அதிகம் பவிசு
இந்தப் பதவியைப் பிடிக்க ஐந்தாண்டுகளும் கிடைக்கும் தொடர் பரிசு
இதற்காக செலவழிக்கப்படும் தொகை அதிகபட்சமாக ரூ. 3 கோடி
நம்புங்க... இது எம்.எல்.ஏவுக்கு அல்ல.... பஞ்சாயத்துத் தலைவருக்கு!

உள்ளாட்சித்தேர்தல் இந்த லட்சணத்துல நடந்தால்
காந்தியடிகள் கண்ட சுயராஜ்யம் அமையாது....மாறாக,
பஞ்சாயத்து தலைவர்களின் தனி ராஜ்யம் தான் அமையும்.
இப்படித் தான் எங்கள் ஊரு ஜனநாயகம் நாடாளுமன்றத்
தேர்தலையும், சட்டப்பேரவைத் தேர்தலையும் மிஞ்சும்!

இப்ப சொல்லுங்க..... ஜனநாயகத்தில் சிறந்த நாடு
பாரதத்தின் காலடியில் கிடக்கும் தமிழ்நாடு தானே?
விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்தது இந்த நாடு தானே?
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தில் எங்கள்
தமிழ்நாட்டை மிஞ்சும் அளவுக்கு வேறு நாடு உண்டா?”

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கவிதைப் பாடியிருக்கிறார்.
 

click me!