மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் சட்டப்பேரவையில் எங்கள் செயல்பாடு இருக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி…

First Published Jun 7, 2017, 1:55 PM IST
Highlights
Our activity will be in the legislature to make people happy - said by stalin


வரும் 14 ஆம் தேதி முதல் 19 ஆம்  தேதி வரை தமிழக சட்டப் பேரவையில் நடைபெறவுள்ள மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுகவின் செயல்பாடுகள் மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இருக்கும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி2017 – 2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நான்கு நாட்கள் மட்டுமே சட்டப் பேரவை கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறாமல் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததாக ஆளுநர் அறிவித்தார். இதற்கு  கடும் எதிர்ப்புத் தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உடனடியாக சட்டப் பேரவையை கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனிடையே  வரும் 14 ஆம்  தேதி சட்டப் பேரவை கூடும் என்றும் இந்த கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எத்தனை நாட்கள் நடைபெறும்  என்பது அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் , எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஜுலை மாதம் 19 ஆம் தேதி வரை 24 நாட்கள் கூட்டத் தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுகவின் செயல்பாடுகள், மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு அரசு முயற்சி மேற்கொள்வது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, படம் திறக்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

click me!