கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை தமிழகத்தில் நடத்த உத்தரவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு.

Published : Aug 26, 2020, 03:43 PM IST
கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை தமிழகத்தில் நடத்த உத்தரவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு.

சுருக்கம்

இந்த கோவிஷீல்டு தடுப்பூசி இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது. 

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை தமிழகத்தில் நடத்த தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- 

மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு மருத்துவப்பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். Remdesivir, Tocilizumab, Enoxaparin போன்ற உயிர் காக்கும் வீரியம் மிக்க மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. 

மனிதகுலத்தை கொரோனா நோய் தொற்று தாக்குதலிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் மட்டுமே பேருதவியாக இருக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. பல்வேறு நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இங்கிலாந்தைச் சார்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்து இந்தத் தடுப்பூசியை ஆரோக்கியமான நபர்களுக்கு செலுத்தி நோய் எதிர்ப்புத் திறனை கண்டறியும் ஆராய்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வல்லமை வாய்ந்ததாக அமையும் என்பது உலக அளவில் மருத்துவ நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய அளவில், தடுப்பூசியை சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம்  சென்னையை தெரிவு செய்துள்ளது.  தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அவர்கள் முதன்மை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆய்வு 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் மேற்கொள்ளப்படும். 

இந்த ஆராய்ச்சியை சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சிக் கழகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து மேற்கொள்ளும். சென்னையைப் பொறுத்த வரையில் இந்த கோவிஷீல்டு தடுப்பூசி இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்து விடும். மேலும், 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலில் உருவாக்கி விடும். இரண்டாம் கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டு வரப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மக்கள் நலன் காக்கும் பணிகள் கொரோனா தடுப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!