ஓபிஎஸ் பரதனாக இருந்திருந்தால் மீண்டும் பரதனா(முதல்வர்)கியிருப்பார்... ஓபிஎஸ் மீது டிடிவி தினகரன் கரிசணம்.!

By Asianet TamilFirst Published Feb 16, 2021, 9:18 PM IST
Highlights

ஓ. பன்னீர்செல்வம் பரதனாக இருந்திருந்தால் மீண்டும் பரதனாகியிருப்பார் என்று அமமுக  பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக அரசு வெற்றி நடை போடவில்லை. இது தள்ளாடும் அரசு. மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு சென்று போய் சேரவில்லை. அதனால்தான் இப்படி விளம்பரம் செய்கிறார்கள். பரதன் என்று தன்னைத் தானே விளம்பரப்படுத்தி கொள்கிறார் ஒ.பன்னீர்செல்வம். அவர் பரதனாக இருந்திருந்தால் மீண்டும் பரதனாகியிருப்பார். ஆனால், அவர் ராவணனிடம் சென்று சேர்ந்து விட்டார். ஒரு வேளை அப்படி சேராமல் இருந்திருந்தால் அவர் மீண்டும் பிப்ரவரியில் பரதனாகியிருப்பார். ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆலோசனையில் செயல்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் பரதனாக திரும்ப வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், “வந்தால் பார்க்கலாம்” என்று தெரிவித்தார். உடனே செய்தியாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் மீது சாஃப்ட் கார்னரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், “அவர் மீது மட்டுமல்ல. எங்களை திட்டுவோர் உட்பட எல்லோர் மீதும் சாஃப்ட் கார்னர்தான்” என்று தெரிவித்தார். 
மேலும் டிடிவி தினகரன் கூறுகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக ஆட்சியைப் பிடிக்கும். அதிமுகவை மீட்கும். மத்திய பட்ஜெட்டில் சிறிது நன்மைகளும் நிறைய தீமைகளும் உள்ளன. அதிமுக அரசு தப்பித்தவறி ஒருசில நன்மைகளைச் செய்திருந்தால், அது ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட திட்டங்கள்தான். உள்ளாட்சி தேர்தலில் 15 சதவீத வாக்குகளை நாங்கள் பெற்றோம். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று சாதனை புரிந்ததை போல சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சிக்கு வரும்.


ஸ்லீபர் செல் என்பவர்கள் எம்.எல்.ஏ.க்களோ எம்.பிக்களோ மட்டும் அல்ல, அதிமுகவின் உண்மை தொண்டர்களும் ஸ்லீபர் செல்கள்தான். சசிகலாவை வரவேற்றபோது அதை மக்கள் பார்த்தார்கள். சசிகலாவை காரில் அழைத்துவந்த சம்மங்கி, தட்சிணாமூர்த்தி போன்றவர்கள் எல்லாம் ஸ்லீபர் செல்கள்தான்.” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். “ஓ.பன்னீர்செல்வம் பரதனாக இருந்திருந்தால் மீண்டும் பரதனாகியிருப்பார்.” என்று டிடிவி தினகரன் கூறியிருப்பதன் மூலம், 2017-ல் தங்களை எதிர்க்காமல் இருந்திருந்தால், சசிகலா சிறைக்கு சென்றபோது மீண்டும் முதல்வராகியிருப்பர் என்று அர்த்தத்தில் டிடிவி தினகரன் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. 

click me!