இன்னும் ஓபிஎஸ் எங்க ஆள்தான்.. ஒன்று சேரும் பழைய டீம்.. டிடிவி.தினகரன் அதிரடி பேட்டி..!

By vinoth kumarFirst Published Oct 27, 2021, 11:17 AM IST
Highlights

தேர்தல் வெற்றி, தோல்விகளை கண்டு துவண்டு விடுபவர்கள் அல்ல அம்மாவின் பிள்ளைகள். அதிமுக என்ற இயக்கத்தை மீட்டெடுப்பதில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எப்போதும் நிதானமாகத் தான் பேசுவார் சரியாகத்தான் பேசி இருக்கிறார். சரியான கருத்தை சொல்லி இருக்கிறார் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்;- அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் ஏற்றுக்கொள்வது ஏற்றுக் கொள்ளாத மக்கள் விருப்பம். சசிகலா சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள். அரசியல் இயக்கத்திற்கு தலைமை தாங்கி இருப்பவர்கள் பிறரை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும்போது கண்ணியத்தோடு வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றார். இவரது பேட்டி அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், மருது சகோதரர்களின் 220வது குருபூஜையொட்டி தஞ்சையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- தேர்தல் வெற்றி, தோல்விகளை கண்டு துவண்டு விடுபவர்கள் அல்ல அம்மாவின் பிள்ளைகள். அதிமுக என்ற இயக்கத்தை மீட்டெடுப்பதில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். 

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறியிருக்கிறார். எப்போதும் நிதானமாக பேசும் ஓபிஎஸ் சரியாகத்தான் பேசியிருக்கிறார். அமமுக தொடங்கப்பட்டதே துரோகத்தை வீழ்த்தி அதிமுகவை மீட்டெடுக்கத்தான். தமிழகத்தில் உண்மையான அதிமுக ஆட்சியை உருவாக்க அதற்கான பயணம் தொடரும். இறுதி மூச்சு வரை போராடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார். 

முன்னதாக பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்த ஓபிஎஸ் அவ்வப்போது கட்சிக்கூட்டங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து, டிடிவி.தினகரனுக்கு ஓபிஎஸ் பழக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கமே, 2001ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது. சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற உடன் தினகரன் ஆசியால் வருவாய்த்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சராக இருந்து கொண்டு தங்களுக்குக் காட்டிய பணிவால் சசிகலா குடும்பத்தினரை ஓபிஎஸ் கவர்ந்தார். இதனையடுத்து, சசிகலா, டிடிவி.தினகரனுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதையடுத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், எடப்பாடி மீது அதிருப்தியின் காரணமாக மீண்டும் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். இதனால், மீண்டும் டிடிவிதினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் மீண்டும் ஒன்று சேர வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சனர்கள் கூறிவருகின்றனர். 
 

click me!