தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதன்படிதான் ஓபிஎஸ் செயல்படுவார்.. மாஸ் காட்டிய ரவீந்திரநாத்.

By Ezhilarasan BabuFirst Published Aug 17, 2022, 4:47 PM IST
Highlights

தொண்டர்கள் என்ன  நினைக்கிறார்களோ எதை பிரதிபலிக்கிறார்களோ அதன்படிதான் ஓபிஎஸ் செயல்படுவார் என அவரது மகன் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.  ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்


 

தொண்டர்கள் என்ன  நினைக்கிறார்களோ எதை பிரதிபலிக்கிறார்களோ அதன்படிதான் ஓபிஎஸ் செயல்படுவார் என அவரது மகன் ரவீந்திரநாத் கூறியுள்ளார். ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் செயல்பட்டு வந்த நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில்  கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை கட்சியில்  இருந்து நீக்கினார். அதைத்தொடர்ந்து ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது, அதில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என  உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்பிற்கு  கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது, இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை பசுமை வழி சாலை உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய தகவல் பின்வருமாறு:- 

வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு அதிமுக தொண்டர்கள் கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன், அதிமுகவில் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு எதிராக நான் நாடாளுமன்ற உறுப்பினராக தொடரக்கூடாது என கடிதம் அளித்தனர், ஆனால் அதற்கு நானும் கழக ஒருங்கிணைப்பாளரும் மறுப்பு கடிதம் அனுப்பினோம், அங்குள்ள சபாநாயகர் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்பதை அனைவரும் அறிந்ததே,  2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகசார்பில் வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான் தான்.

அதற்கு நன்றிக்கடனாக தமிழகம் மற்றும் தேனி மக்களுடைய கோரிக்கைகளை மோடி வரை கொண்டு சென்று அனைத்து திட்டங்களையும் வலியுறுத்திப் பேசி உள்ளேன். எனவே எனது பணி எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக இருக்கும், தற்போதுள்ள சூழ்நிலையில் அனைவரையும் அரவணைத்து செல்வேன் என ஒருங்கிணைப்பாளர் பேசியுள்ளார். அதிமுக ஒன்று கூட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியலில் இன்று ஒன்றும், நாளை ஒன்றுமாக நிகழும் எனவே அதை தான் உறுதியாக சொல்ல முடியாது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ என்ன பிரதிபலிக்கிறார்களோ அதன்படி ஒருங்கிணைப்பாளர் செயல்படுவார் அவர் கூறினார்.  

click me!