அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைந்து தொண்டர்களை சந்திக்கும் வகையில் தென் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக அதிகார மோதல்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல் காரணமாக அதிகார போட்டி அதிகரித்தது. இதனையடுத்து கட்சியில் இருந்து டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் நீக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் பிரிந்து 38 தொகுதிகளில் அதிமுக தோல்வியை தழுவியது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தையும் இழந்தது. இதற்கு இரட்டை தலைமை தான் காரணம், உரிய முடிவு எடுக்க காலம் தாமதம் ஏற்படுவதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒற்றை தலைமை முழக்கம் எழுந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இந்த எதிர்ப்புகளை கண்டு கொள்ளாத எடப்பாடி தரப்பு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவித்தது.
ஓபிஎஸ்- டிடிவி கூட்டணி
இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என சட்டப்போராட்டம் நடத்தினார். இருந்த போதும் சட்ட போராட்டம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக வந்ததால் அடுத்த கட்டமாக டிடிவி மற்றும் சசிகலாவுடன் இணைந்து பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டார். இதற்கான சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது தொண்டர்கள் விருப்பப்படி டிடிவி தினகரனை சந்தித்ததாகவும், அதிமுகவை மீட்டு தொண்டர்கள் கையில் ஒப்படைப்பதே தனது லட்சியம் என டிடிவி தினகரனை சந்தித்தப்பின் போது ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் உடன் பகை எதுவும் இல்லை. அவரை நம்பி இருட்டில் கூட கைக்கோர்த்து செல்வேன். எடப்பாடி பழனிசாமியுடன் செல்ல முடியுமா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
தொடரும் அதிமுகவின் தேர்தல் தோல்வி
இந்தநிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில்கொங்கு மண்டலத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை அதிமுக கைப்பற்றிய நிலையில் தென் மாவடங்களில் ஒற்றை இலக்கங்களிலேயே வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக டிடிவி தினகரன் என கூறப்பட்டது. பெரும்பாலான இடங்களில் அமமுக சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வரை பிரிந்தது. இதன் காரணமாக 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகளை அதிமுக இழந்தது. இந்தநிலையில் தற்போது ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து பிரிந்து டிடிவியோடு இணைந்து இருப்பது அந்த அணிக்கு தென் மாவட்டங்களில் கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குகளை பிரிக்கும் ஓபிஎஸ்-டிடிவி
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அதிமுகவினர் ஓட்டு இரண்டாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக கேட்கும் இடங்களை அதிமுக கொடுக்கவில்லையென்றால், ஓபிஎஸ்-டிடிவி அணி இணைந்து பாஜக செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அது போல அதிமுகவின் வாக்கு வங்கி பிரிவு திமுகவின் வெற்றியை அதிகரிக்ககூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
வெக்கங்கெட்டவர்களை பற்றி பேச எனக்கு வெட்கமாக உள்ளது..! ஓபிஎஸ்க்கு எதிராக சீறிய கேபி முனுசாமி