
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவின் இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை துணை ஆணையர் உமேஷ் சின்ஹா இன்று நேரில் ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினர்.
பிற்பகலுக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடமும் அவர் விவாதித்தார்.
இதில் அதிமுகவின் இரு அணிகளான சசிகலா, ஓ.பி.எஸ் தரப்பும். திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே இக்கூட்டத்திற்குப் பின் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மைத்ரேயன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, " ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக மத்திய பாதுகாப்பு படையை உடனே அனுப்ப வேண்டும் என்று உமேஷ் சின்ஹாவிடம் கோரிக்கை விடுத்தோம். சசிகலா அணியினர் 1 லட்சம் தொப்பிகளை விநியோகித்துள்ளனர்.
வாக்குச்சாவடியில் செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் என்று உமேஷ் சின்ஹா எங்களிடம் கூறினார். இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.
பன்னீர்செல்வம் அணியினர் இந்த ரூட்டில் பயணித்தால், சசிகலா அணியோ டாப் கியரைத் தட்டி தெறிக்க விட்டிருக்கிறது. டிடிவி தினகரன் சார்பில் சின்ஹா முன்பு ஆஜரான நிர்வாகிகள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பன்னீர் அணிக்கு வழங்கியுள்ள மின்கம்பம் சின்னத்தை முடக்க மனு அளித்தனர்.
மின்கம்பத்தை இரட்டை இலையுடன் ஒப்பிடும் வகையில் அவர்கள், இரட்டை மின்கம்பம் என்று வாக்கு சேகரிப்பதாக உமேஷ் சின்ஹாவிடம் புகார் மனுக்களை முன்வைத்தனர்
ஏப்ரல் 12 ஆம் தேதி வரை இன்னும் எத்தனை களோபரங்கள் அரங்கேறப்போகிறதோ!