
சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை எப்படி வசூலிப்பது என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 4 வருட சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார். வழக்கில் சேர்க்கப்பட்ட சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் 4 பேரும் நிரபராதிகள் என தீர்ப்பளித்து விடுவித்தது. ஆனால் இதற்கு ஆட்சேபம் தெரிவித்த கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. நீண்ட நாட்கள் நடைபெற்ற இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
ஆனால் முதல் குற்றவாளியான ஜெயலலிதா உயிரிழந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.சசிகலா உள்ளிட்ட ஏனைய மூன்று குற்றவாளிகளும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே முதல் குற்றவாளியான ஜெயலலிதா மறைந்தாலும் அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை எப்படி வசூலிப்பது என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தற்போது சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இப்புதிய மனு மீதான விசாரணை ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.