
தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் அளித்த புகாரில் டிடிவி.தினகரனை டெல்லி போலீசார் தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தவறு மேல் தவறு செய்து சசிகலா அணியினர் கட்சிக்கு அவப்பெயர் அளித்து விட்டதாகவும், இதனைக் களைய இரு அணிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். நேற்று தெரிவித்திருந்தார்.
பன்னீரின் இந்த திடீர் பேட்டியைத் தொடர்ந்து இரு அணிகளையும் மீண்டும் இணைப்பதற்கான சமரச பேச்சுவார்த்தை நேற்று இரவில் இருந்தே தொடர்ந்து நடைபெற்று வந்ததது. இதனைத் தொடர்ந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன் ஆகியோர் இன்று காலை சந்தித்து பேசினர். இதன் பிறகு நேராக டிடிவி தினகரனின் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர்கள் இருவரும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.
இந்த பரபரப்பான சூழலில் சசிகலாவின் தீவிர ஆதரவாளரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் அனைத்தும் பகீர் ரகமாகவே இருந்தது.
அப்போது பேசிய அவர், "முதல் அமைச்சர் பதவி உள்பட 6 அமைச்சர்கள் பதவி கொடுத்தால் இணையத் தயார் என ஓ.பி.எஸ். தெரிவித்ததார். ஓபி.எஸ். உடன் பேச்சுவார்த்தை நடத்த குழுஅமைக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அதிமுக எம்.எல்,ஏக்கள் கூட்டத்தை கூட்டும் எண்ணம் இல்லை"
இரு அணிகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சண்டைகள் இல்லை. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கொண்டனர். துணைப் பொதுச் செயலாளர் அனுமதி இல்லாமல் கூட்டத்தை நடத்த அமைச்சர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது .சசிகலா தான் பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை." இப்படியாக முடிகிறது.
வெற்றிவேல் அளித்த பேட்டியை கூர்ந்து கவனித்தால், அமைச்சர்கள் சிலர் ஓ.பி.எஸ். பக்கம் சாய தயாராக இருப்பதையே காட்டுகிறது. நேற்று வரை ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக எதிர்த்து வந்த தம்பிதுரையின் இன்றைய பேச்சில் எக்கச்சக்க மாற்றங்கள் தெரிகின்றன.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளிக்கையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் பறிபோகக் கூடாது என்பதற்காக பன்னீர்செல்வத்துடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.
மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் எனக்கு சகோதரர். அவருக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை". இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்
இன்னும் என்னென்ன அமளி துமளி நடக்கப் போகிறதோ!