
நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில் ஓ.பி.எஸ்.அணியினர் நாஞ்சில் சம்பத், கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாகர்கோவில் வரும் நாஞ்சில் சம்பத்துக்கு கறுப்பு கொடி காட்டுவோம் என அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக எடப்பாடி அணி நிர்வாகிகள் பலர் மாவட்ட எஸ்பி தர்மராஜனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில், நாகர்கோவில் பகுதியில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகிறார்.
அவருக்கு கறுப்பு கொடி காட்டப்போவதாக சிலர் கூறியுள்ளனர். எனவே நாகர்கோவிலில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சிலர், நாகர்கோவில் டிஎஸ்பியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, நாஞ்சில் சம்பத், அவதூறாக பேசி வருகிறார். எனவே நாகர்கோவில் வரும் அவருக்கு எதிராக நாங்கள் கறுப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
அதிமுகவின் இரு அணியினரும் மாறி மாறி போலீசில் மனு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.