
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமாரின் கார் மீது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி ஆபாச வார்த்தைகளால் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிமுக ஒற்றை தலைமை என்பது கட்சியில் மீண்டும் பூகம்பம் வெடித்தது. இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், சி.வி.சண்முகம், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஓ.பி.எஸ் கட்சி அலுவலகத்திற்கு வர இருப்பதை அறிந்து, அங்கு நடந்துகொண்டிருந்த பொதுக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன் கூட்டியே முடிக்கப்பட்டு அவசர அவசரமாக மூத்த நிர்வாகிகளான சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் புறப்பட்டனர். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்;- அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூன் 23-ம் தேதி நடைபெறும். ஒற்றைத் தலைமை விவகாரம் செயல் வடிவம் பெறுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.
கட்சியில் எந்த முடிவாக இருந்தாலும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படும். அதேபோல், ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும், அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக தீர்மானக் குழு கூட்டம் ஜூன் 18-ம் தேதி மீண்டும் நடைபெறும். பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் என்றார்.
இதனையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமாரை 'கட்சியை அழித்தவனே' என கூச்சலிட்டு, ஆபாச வார்த்தைகளால் ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் திட்டினர். மேலும், அவரது கார் மீது சொந்த கட்சியினேரே தாக்குதல் நடத்திய சம்பவமும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.