குள்ள நரிகளுக்கு இறைவன் கூலி கொடுப்பான்... துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சாபம்!

By Asianet TamilFirst Published May 2, 2019, 8:19 AM IST
Highlights

ஜெயலலிதா என் மீது வைத்த நம்பிக்கைக்கும் அவருடைய தொண்டர்களின் அளவற்ற பாசத்துக்கும் நானும் என் வம்சாவளிகளும் எத்தனை தலைமுறைக்கும் நன்றிக்கடன் செலுத்தினாலும் போதாது. என் உயிர் போகும் நாளில் அதிமுக கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக வைத்து வாழ்கிறேன். 

“நான் பாஜகவுக்கு செல்லப் போகிறேன் என்று ஒரு புரளியை உள்நோக்கம் படைத்தவர்கள் பரப்பி வருகிறார்கள்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சாதாரண தொண்டனான எனக்கு நகராட்சி தலைவர், எம்.எல்.ஏ., அமைச்சர் எனப் பதவிகளை வழங்கியதோடு மூன்று முறை முதல்வராக 12 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக பொருளாளராக என்னை அமர்த்தியவர் ஜெயலலிதா. என் கனவிலும்கூட நான் எதிர்பார்த்திராத உயரங்களை தந்து, இத்தனை பெருமைகளை அள்ளி தந்தது அதிமுகதான். 
அதிமுகவை விட்டுவிட்டு நான் பாஜகவுக்கு செல்லப் போகிறேன் என்று ஒரு புரளியை உள்நோக்கம் படைத்தவர்கள் பரப்பி வருகிறார்கள். ஜெயலலிதா என் மீது வைத்த நம்பிக்கைக்கும் அவருடைய தொண்டர்களின் அளவற்ற பாசத்துக்கும் நானும் என் வம்சாவளிகளும் எத்தனை தலைமுறைக்கும் நன்றிக்கடன் செலுத்தினாலும் போதாது. என் உயிர் போகும் நாளில் அதிமுக கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக வைத்து வாழ்கிறேன்.

 
அதிமுகவின் எதிர்காலத்துக்காக மெகா கூட்டணி அமைத்தோம். இக்கூட்டணி ஈட்ட உள்ள வெற்றியை நினைத்து குலை நடுங்கும் சில குள்ள நரிகள், வீண் வதந்திகளைப் பரப்பி என்னையும் என் அரசியல் வாழ்க்கையையும் காயப்படுத்த அலைகின்றன. என் உழைப்பை, பெருமையை, கண்ணியத்தை கறை படிய செய்துவிடலாம் எனத் திட்டமிடுவோருக்கு மக்கள் சக்தியும் நான் வணங்கும் இறை சக்தியும் உரிய கூலியைக் கொடுக்கும்.

 
என் மீது பரப்பப்படும் அவதுாறுகளை தொண்டர்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களும் செவி கொடுத்து ஏற்க மாட்டார்கள். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அண்மையில் வாரணாசி சென்ற ஓ.பன்னீர்செல்வம் மோடி வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மகனுக்கு அமைச்சர் பதவியும் தனக்கு ஆளுநர் பதவி கேட்டதாகவும், தமிழக முதல்வராக ஆக்க வேண்டும் என்று பாஜக தலைமையை வலியுறுத்தியதாகவும் பல்வேறு ஊகங்கள் கசிந்தன. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், “நீங்கள் பாஜகவில் சேரப்போகிறீர்களா” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் பாஜகவுக்கு செல்லப்போவதாகக் கூறப்படுவது முட்டாள்தனமானது” என்று தெரிவித்தார். இந்நிலையில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

click me!