
அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டது… ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு ….
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஓபிஎஸ் அணி சார்பில் நியமிக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அக்கட்சியில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ்சிடம் இருந்து முதலமைச்சர் பதவியை பறித்து, தானே முதலமைச்சராக வேண்டும் என விரும்பினார்.
இதையடுத்து அவர் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் கடுப்பான ஓபிஎஸ், ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்து தனது போராட்டத்தைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது.
இந்நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இரு தரப்பு அணிகளும் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியை நீக்க வேண்டும் என இரு நிபந்தனைகளை விதித்தார்.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளையும் இணைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் ஓபிஎஸ்சின் நிபந்தனைகளை ஏற்காத சசிகலா அணியினர் தொடர்ந்து தங்கள் இஷ்டப்படி பேச தொடங்கினர். இதே போல் ஓபிஎஸ் அணியினரும் கண்டபடி பேசினர்.
இதைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை அரு தரப்பினருமே வெளிப்படையாக தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் இரு அணிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஓபிஎஸ் அணி சார்பில் நியமிக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதாக தெரிவித்தார்.