தேர்தல் முடிவு வரும் முன்பே எம்.பி.யான ஓபிஎஸ் மகன்... சர்ச்சையில் சிக்கிய தேனி அதிமுக வேட்பாளர்!

By Asianet TamilFirst Published May 17, 2019, 6:56 AM IST
Highlights

இந்தக் கோயில் வளாகத்தில் காசி அன்னபூர்ணி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகப் பணிகளுக்கு அதிக நன்கொடைகள் அளித்த பட்டியல் கோயில் நிர்வாகம் சார்பில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கல்வெட்டில் மூன்று முக்கியமான பெயர்கள் ஹைலைட் செய்யப்பட்டுள்ளன.
 

தேர்தல் முடிவே அறிவிக்கப்படாத நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. என்று குறிப்பிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பெயரை கல்வெட்டில் பொறித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
தேனியில் குச்சனூர் என்ற இடத்தில் சனிஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் காசி அன்னபூர்ணி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகப் பணிகளுக்கு அதிக நன்கொடைகள் அளித்த பட்டியல் கோயில் நிர்வாகம் சார்பில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கல்வெட்டில் மூன்று முக்கியமான பெயர்கள் ஹைலைட் செய்யப்பட்டுள்ளன.
அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவருடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரை தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஓ.பி.ஜெயபிரதீப் குமார் என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.


இதில் தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத் குமாரை  குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது. தேனி நாடாளுமன்றத் தேர்தலில் பண வினியோகம் அமோகமாக நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன. தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. தேர்தல் முடிந்த பிறகு கோவையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.


தற்போது திருவள்ளூரிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு வந்ததும் சர்ச்சையாகி இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி குச்சனூர் சனீஸ்வரன் கோயில் கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை தேனி  பாராளுமன்ற உறுப்பினர் எனக் குறிப்பிட்டிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி கோயில் நிர்வாகமும் பதில் அளிக்க மறுத்துவிட்டது.

click me!