
ஆர்.கே. நகரில் தினகரன் ஆட்கள் முழுதும் வெளியூர் ஆட்களை இறக்கி கொண்டிருக்க ஓபிஎஸ் அதை திட்டவட்டமாக மறுத்து யாரையும் இறக்க வேண்டாம் என நேற்று பிரச்சாரத்தில் இறங்க எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து சந்தோஷத்தில் உள்ளார் ஓபிஎஸ்.
அதிமுக இரண்டாக உடைந்ததை அடுத்து யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பதற்கான பலப்பரிட்சையாக ஆர்.கே.நகர் தேர்தலை இரு தரப்பும் எதிர்ப்பார்க்கின்றனர். இதில் அடி மேல் அடியாக டிடிவி.தினகரன் தரப்புக்கு பின்னடைவுகள் வந்துகொண்டே இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை எளிதாக வாங்கிவிடலாம் என்று கனவு கண்டது ஓபிஎஸ் தரப்பில் முறியடிக்கப்பட சின்னம் முடங்கியது பெரிய பாதிப்பாக தினகரன் தரப்பில் பார்க்கப்படுகிறது.
சின்னம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை , தினகரன் தரப்புக்கு கிடைக்க கூடாது என்ற ஓபிஎஸ் தரப்பின் எண்ணம் ஈடேற பெரு மகிழ்ச்சியில் இருந்தவர்களுக்கு மேலும் ஒரு சந்தோஷமாக இரட்டை மின்விளக்கு கம்பம் கிடைக்க அதிலும் கோட்டை விட்ட தினகரன் அணியினருக்கு குல்லா கொடுத்தது தேர்தல் ஆணையம்.
கரையேறுவாரா என்று தத்தளிக்கும் தீபாவுக்கு கொடுத்தது படகு சின்னம். ஆனால் ஆர்.கே. நகர் என்னவோ மண்ணின் மைந்தன் மதுசூதனன் பக்கம் தான் எனபது போல் இருக்கிறது அவரது ஐந்து நாள் பிரச்சாரங்கள்.
எம்ஜிஆர் காலத்து ஆளான மதுசூதனன் களம் கண்ட ஆர்.கே.நகரில் துள்ளி விளையாடி வருகிறார். மறுபுறம் என்னதான் பணத்தை வாரி இறைத்தாலும் ஆட்கள் இல்லையே என்ற கவலைத்தான் தினகரன் அணியினருக்கு.
இதில் வெளியூரிலிருந்து ஆட்களை இறக்கி வேலை பார்க்கிறார் தினகரன். ஆனால் மறுபுறம் ஓபிஎஸ் பிரச்சாரத்தை துவக்கும் முன்னர் கட்சியினருக்கு கடுமையாக உத்தரவு ஒன்றை போட்டு விட்டே இறங்கியுள்ளார்.
வெளியூர் ஆட்கள் யாரையும் இறக்காதீர்கள். சொந்த தொகுதி மக்கள் எண்ணம் எப்படி இருக்கிறது என்று முதலில் பார்க்க வேண்டும். அம்மா இருக்கும் போது அப்படி வண்டியில் கிளம்பி வந்தார்கள் என்றால் அலைமோதும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவோம். இப்பவும் அதே தொண்டர்கள் , தாய்மார்கள் இருக்கிறார்கள் அவர்கள் யார் பக்கம் பல்ஸ் பார்ப்போம் என்று கூறி எந்த ஏற்பாடும் இல்லாமல் இறங்கியுள்ளார்.
அவர் எதிர் பார்த்தது போலவே கூட்டம் அலைமோத மகிழ்ச்சி கடலில் உள்ளனர் ஓபிஎஸ் தரப்பினர். அலைமோதும் கூட்டம் அது ஜெயலலிதாவுக்கு மட்டுமே ஆனால் அதிமுக எங்கள் பக்கம் தான் என்று இன்று வந்த கூட்டம் நிறுபித்து விட்டது என்று சந்தோஷமாக கூறினார் நிர்வாகி ஒருவர்.
மறுபுறம் டிடிவிக்கு பிரச்சாரம் செய்ய வந்த தம்பிதுரை ஏண்டா வந்தோம் என்று வழியெங்கும் ரெட்டை இலையை முடக்கிவிட்டு வருகிறார் பார் , எவ்வளவு பணம் வாங்கினார் என்றெல்லாம் தொண்டர்கள் வசை மாறியுடன் இறுகிய முகத்துடன் போனார் தம்பிதுரை.
தினகரன் தரப்பினர் கையெடுத்து கும்பிட்டாலும் ஒரு மாதிரியாக பார்க்கும் தாய்மார்கள் , ஓபிஎஸ்சுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர். இரண்டு பேர் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்படி கேட்க ஜெயராமச்சந்திரன் , என்று பெயர் வைத்துவிட்டு போனார் ஓபிஎஸ்.
மொத்தத்தில் வெல்வார்களோ இல்லையோ , அதிமுக ஓபிஎஸ் பக்கம் தான் என்று கூடும் கூட்டமே சாட்சியாக உள்ளதில் அதிக சந்தோஷத்தில் இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு.