
இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்த வேண்டும் அல்லது அதே அளவிற்கு சலுகைகளை இந்துக்களுக்கும் வழங்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் விஷ்வ ஹிந்தி பரிஷத் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா’ஏக் முத்தி அனஜ்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி, உணவு தானியங்கள் நன்கொடையாக பெறப்பட்டு, ஏழை இந்துக்களுக்கு அளிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும். அகமதாபாத் நகரில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திறன் பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தையும் தொகாடியா தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரவீன் தொகாடியா, இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இந்துக்கள் கட்டும் வரிப்பணத்திலிருந்து இஸ்லாமியர்கள் சலுகைகள் பெறும் போது, ஏன் படேல், தாக்கூர் மற்றும் கோலி இன மக்கள் சலுகைகள் பெறக் கூடாது? என கேள்வி எழுப்பினார்.
இஸ்லாமியர்களுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளவும் , அவர்கள் கல்வி நிறுவனங்கள் நடத்தவும் அரசு அவர்களுக்கு பல்வேறு மானியங்களை அளிக்கிறது. ஆனால் இந்துக்களுக்கு அவ்வாறு அளிக்கப்படுவதில்லை என காட்டமாக தெரிவித்தார்.
அதனால் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்படும் மானியங்களும்,சலுகைகளும் நிறுத்தப்பட வேண்டும் அல்லது அதே அளவு சலுகைகள் இந்துக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.