திமுக ஆட்சி என்றாலே அது இருட்டாட்சி, காட்டாட்சி.! மின்வெட்டால் இருளில் மூழ்கிய தமிழகம் - சீறும் ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Jun 8, 2023, 3:48 PM IST

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின் குறை மாநிலமாக மாறியிருக்கிறது.தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 


மின் வெட்டால் தமிழகம் பாதிப்பு

தமிழகத்தில் ஏற்படுகிற மின் வெட்டு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், 2006-2011 தி.மு.க. ஆட்சியில், 2008 ஆம் ஆண்டு முதலே குறைந்த மின் அழுத்தம், மின் வெட்டு, மின் பற்றாக்குறை என ஆரம்பித்து மின்சார விடுமுறை என்ற அளவுக்கு மோசமான நிலைமை ஏற்பட்டதையும், தமிழ்நாட்டில் தற்போது நிலவும் மின்வெட்டினையும் பார்க்கும்போது "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" என்ற பாடல் வரிகள்தான் மக்களின் நினைவிற்கு வருகிறது.தி.மு.க. ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் இருள் சூழ்ந்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. 

Tap to resize

Latest Videos

மின் கட்டண உயர்வால் சிறு குறு நிறுவனங்கள் மூடியாச்சு..! இப்போ மீண்டும் மின் கட்டண உயர்வா.? அன்புமணி ஆவேசம்

முற்றுகையிட்டு போராட்டம்

ஓரிரு வாரங்களுக்கு முன்பு, வட சென்னைக்குட்பட்ட புறநகர் பகுதிகள், சென்னைக்குட்பட்ட பகுதிகள், என சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதன் காரணமாக மக்கள் தவித்தனர். இந்த மின்வெட்டு தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஆலந்தூரில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து மின்சார வாரிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர்.  திருவள்ளூர் சிட்கோ தொழிற்பேட்டையில் கடந்த இரு நாட்களாக மின்வெட்டு இருப்பதால் பல கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் பிரச்சனை நான்கு மாதங்களாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஊழியர்கள் பற்றாக்குறை

காலையில் அலுவலகத்திற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்றுவிட்டு திரும்பி வந்து வீட்டில் தூங்கலாம் என்று நினைத்தால், இரவு நேரங்களில் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு தூக்கமே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் இரவு மற்றும் பகலில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு காரணமாக பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர். தவிக்கின்றனர். சென்னையில் இந்த நிலைமை என்றால், பிற மாவட்டங்களில் நிலைமை வேறு மாறாக இருக்கிறது. பிற மாவட்டங்களைப் பொறுத்த வரையில், நகர்ப்புறங்களில் பகலிலும், கிராமப்புறங்களில் இரவிலும் குறை மின்னழுத்தம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான இடங்களில் ஒரு Phase இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் ஊழியர்கள் பற்றாக்குறை, 

இனி தமிழ்நாட்டில் ஒளி பிறக்காதா?

மின்சாதளப் பொருட்கள் பற்றாக்குறை, மின் உற்பத்திக்குத் தேவையான பொருட்கள் பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறை என பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுவிட்டது, வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லும் தி.மு.க. அரசு, மின்சார வாரியத்தில் நிலவும் பற்றாக்குறையை குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் திறமையான அரசாங்கம் இல்லாதததான் என்று மக்கள் நினைக்கிறார்கள். தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, பொதுமக்கள் மனதில் ஆழ்ந்த கவலை குடி கொண்டுள்ளது. இனி தமிழ்நாட்டில் ஒளி பிறக்காதா? வளமான எதிர்காலம் உருவாகாதா? என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

போராட்டம்- எச்சரிக்கை

தற்போது தமிழ்நாட்டில் நிலவுகின்ற நிலைமையைப் பார்க்கும்போது, எதையும் சமாளிக்க முடியாமல் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்து நிற்கிறது, தி.மு.க. அரசு திணறிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின் குறை மாநிலமாக மாறியிருக்கிறது.தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த நிலை நீடித்தால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழகம் தலை சிறந்த மாநிலம்.!ஆளுநருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

click me!