
ஜெயலலிதா இருந்தபோதே முதல்வராக தினகரன் திட்டமிட்டார். அதனால்தான் அவரை 2008-ல் கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதா, அதன்பின்னர் அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ளவே இல்லை என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், என்னை ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்துவைத்ததாக தினகரன் கூறிவருகிறார். 1980ல் பெரியகுளம் வார்டு பிரதிநிதியாக அரசியல் பயணத்தை தொடங்கிய நான், பெரியகுளர் வார்டு செயலாளர், பெரியகுளம் எம்ஜிஆர் மன்ற இளைஞரணி துணை செயலாளர், பின்னர் செயலாளர், பெரியகுளம் நகர்மன்ற துணைத்தலைவர், நகர்மன்ற தலைவர் என படிப்படியாக உயர்ந்த என்னை, 2001ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ ஆக்கிய ஜெயலலிதா, அவருக்கு சோதனை வந்த சமயங்களில் எல்லாம் என்னை முதல்வராக்கினார். 1980லிருந்து நான் அதிமுகவில் இருக்கிறேன். ஆனால், 1999ல் தான் தினகரன் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட பெரியகுளம் வருகிறார். அந்த வகையில் தினகரனை விட 19 ஆண்டுகள் நான் கட்சியில் சீனியர். அதிமுகவில் எனக்கு 19 வயதானபோதுதான் தினகரன் எல்.கே.ஜியில் சேர்ந்தார். ஆனால் தற்போது அவர்தான் என்னை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியதாக கூறுகிறார்.
ஜெயலலிதா இருந்தபோதே முதல்வராக திட்டமிட்டவர் தினகரன். அதை அறிந்ததால்தான் தினகரனை 2008ல் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார். அதன்பின்னர் நீக்கிய சசிகலாவைக் கூட, மன்னிப்பு கடிதம் கொடுத்த பிறகு ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். ஆனால், தினகரனை ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை மீண்டும் கட்சியில் சேர்க்கவில்லை. தினகரனின் முதல்வர் கனவை அன்றே கண்டுபிடித்ததால்தான் அரசியலை விட்டு ஜெயலலிதா ஓரங்கட்டினார் என பன்னீர்செல்வம் பேசினார்.