
ஆயிரம் டி.டி.வி.தினகரன் வந்தாலும் அதிமுகவையும் இந்த ஆட்சியையும் அசைக்க முடியாது. இதுதான் இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடைகளில் பேசி வரும் தன்னம்பிக்கை வசனம்.
ஊட்டியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில், பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக ஆட்சி மீது எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் சிலர், அரசியல் காரணங்களுக்காக இந்த ஆட்சி குறித்து அவதூறு பரப்புகின்றனர். அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது. இந்த அரசு மீது வீண் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர். இது ஒருபோதும் நடக்காது. இந்த ஆட்சி இன்னும் 3 மாதத்தில் கலைந்து விடும் என டி.டி.வி.தினகரன் கூறுகிறார். ஆயிரம் டி.டி.வி.தினகரன் வந்தாலும் அதிமுகவையும், இந்த ஆட்சியையும் அசைக்க முடியாது” என்று கூறினார்.
வெளி நபர்கள் சொல்வது ஒரு புறம் இருந்தாலும், எடப்பாடியாரின் அமைச்சரவை சகாக்களே மனம் போன போக்கில் பேசி, அரசுக்கு அவப்பெயரைக் கொடுத்து வருகிறார்கள். பாஜக.,வுடன் கூட்டணி குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு ஒன்று சொல்கிறார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுத்து வேறுவிதமாகச் சொல்கிறார். காரணம் செல்லூர் ராஜூ, தினகரனின் ஸ்லீப்பர் செல் என்று அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுபவர். ஆனால் தினகரனோ, பாஜக.,வுக்கு எதிராக கொம்பு சீவிக் கொண்டிருக்கிறார். பாஜக., எதிர்ப்பு அரசியல்தான் தனக்கு போணியாகும் என்று கருதி, திமுக., உள்ளிட்ட கட்சிகளுடன் கூடிக் குலவுகிறார். இந்த நிலையில், அதிமுக.,வில் பெருந்தலைகள் என்னதான் முடிவு செய்திருக்கிறார்கள்?
ஆனால், தினகரனை வெளுத்து வாங்குவதில் இப்போது எடப்பாடியார் தேறிவிட்டார் என்பதையே அவருடைய கோவை, உதகைப் பேச்சுகள் காட்டுகின்றன. கோவையில் தன்னிச்சையாக மனத்தில் தோன்றியதை பேசினார். ஆனால், அவ்வாறு பேசியதையே எழுதி வைத்து இன்று உதகையில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா மாநாட்டில் பேசினார். அப்போதும், ஹவாலா மூலம் வெற்றி பெற்றவர் தினகரன் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தினகரனை அதே போன்ற பாணியில் ஒரு பிடி பிடித்தார். ஆர்.கே.நகரில் தினகரன் ஹவாலா முறையில் பணத்தை வாரியிறைத்து வெற்றி பெற்றுள்ளார், திமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்து மோசடி வழியில் வெற்றி பெற்றது நிலைக்காது என்று மீண்டும் அடித்துக் கூறினார்.
அதேபோல், தினகரனை முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டமன்ற உறுப்பினராக சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று வந்த தாமரைக்கனியுடன் ஒப்பிட்டுப் பேசினார் எடப்பாடியார். “தாமரைக்கனியும் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். ஆனால் அவரால் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற முடியவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவை, ஏமாற்றி கொள்ளையடித்த கும்பலால் கைப்பற்ற முடியாது” என்றார் எடப்பாடி.
ஆக, ஹவாலா பார்ட்டி, துரோகி, உழைக்காத சோம்பேறி, இடத்தைக் கொடுத்தவரின் மடத்தை பிடுங்கியவர், ஸ்லீப்பர்செல் என அஞ்சாம்படை உருவாக்கியவர், குறுக்குச்சால் ஓட்டுபவர், கிரிமினல் - இவை எல்லாம் தினகரன் குறித்து எடப்பாடியார் உதிர்த்த வார்த்தைகள். இந்த வார்த்தைகளால் தினகரனுக்கு பதில் ஹல்வா கொடுத்திருக்கிறார் எடப்பாடியார்.
அவரது பேச்சில் வெளிப்பட்டவை.. “எங்களை துரோகிகள் என்கிறார்கள். ஹவாலா பார்முலாவை அறிமுகப்படுத்தியவர்தான் துரோகி. உழைக்காமலேயே முன்னுக்கு வந்தவர் என்றால் அது தினகரன் மட்டும்தான். எந்த உழைப்பும் கிடையாது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்(சசிகலா) ஜெயலலிதாவுடன் இருந்து உதவி செய்தார். அவர் மூலம் கொல்லைப்புறமாக வந்தவர் தான் தினகரன்.
ஹவாலா பார்முலாவை வைத்து வெற்றி பெற்று விட்டார் தினகரன். ஆனால், நாங்கள் அத்தனை பேரும் உழைத்து முன்னுக்கு வந்து இந்தப் பதவியை அடைந்திருக்கிறோம்.
1974ல் அதிமுகவில் இணைந்தேன். கிளைக்கழக செயலாளராக எம்ஜிஆர் மன்ற ஒன்றிய பொறுப்பாளர், மாவட்ட கழக இணை செயலாளர், மாவட்ட செயலாளர் என படிப்படியாக வந்தேன். கொடுத்த பொறுப்பை செவ்வனே செய்து நாங்கள் முன்னுக்கு வந்தோம். ஆனால் உங்களுக்கு அப்படிப்பட்ட பொறுப்புகள் வழங்கப்படவில்லை. அவர்கள்தான் துரோகிகள்.
கொல்லைப்புற வழியாக வந்து ஆட்சியை கவிழ்த்து கட்சியை கைப்பற்ற துடிக்கிறார் தினகரன்.
ஸ்லீப்பர் செல்கள் என்ற ஒரு விஷயத்தை தினகரன் புதிதாக கண்டுபிடித்திருக்கிறார். அதிமுகவில் இருக்கிற அத்தனை பேரும் ஆட்சி தொடர வேண்டும் என நினைப்பவர்கள் தான். ஆட்சி நீடிக்க வேண்டும் என நினைக்கும் பத்தரைமாற்றுத் தங்கமாக விளங்குபவர்கள்தான் எங்களுடன் உள்ளனர். எங்களிடத்தில் இருப்பவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள். உங்களைப்போல் குறுக்குவழியில் வந்தவர்கள் இல்லை.
கிரிமினல்களுக்குத்தான் கிரிமினல்தனமான எண்ணங்கள் எல்லாம் வரும். கொஞ்ச நாட்கள் தான் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பதவியை தினகரனால் அனுபவிக்க முடியும். அதன் பிறகு ஆண்டவன் பார்த்துக்கொள்வான். மார்ச் மாதத்துக்குள் ஆட்சியை கலைத்துவிடுவதாக தினகரன் கூறிவருகிறார். நீங்கள் இருந்தால்தானே ஆட்சியை கலைக்க முடியும். மார்ச் மாதத்துக்குள் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை பார்ப்போம்...”
இப்படி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு ஊடகங்களில் பேட்டி கொடுத்து, மேடைகளில் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், தினகரன் இனி சட்டசபைக்குள்ளும் நுழையப் போகிறார். இதே ட்ரெண்ட் சபைக்குள்ளும் எதிரொலிக்கும் நாளை தமிழகம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.