இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் கோவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் உருவ படம் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் கோவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் உருவ படம் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒற்றத் தலைமை விவகாரம் பெரும் பிரச்சனையாக மாறியது. இதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆயோர் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனிடையே ஜூலை 11 (இன்று) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வந்து பொது செயலாளர் பதவியை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் எடப்பாடி அணியினர் எண்ணினர். அதேநேரத்தில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடத்தப்படும் பொதுக்குழு சட்டப்படி செல்லாது. அதில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானமும் செல்லாது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதே நேரத்தில் பொதுக்குழுவுக்கு அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ் அணி
இந்த வழக்கில் ஜூலை 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் படி, இன்று சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு, கட்சியின் சட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுக்குழு கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும், விதிகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்தது. இதை அடுத்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக இரட்டை தலைமை பதவியை ரத்து செய்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்திற்கு சீல்..! உள்ளே நுழைந்த வருவாய் துறை அதிகாரிகள்..வெளியேறினார் ஓபிஎஸ்
மேலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்த நிலையில், கோவை அண்ணா சாலையில் உள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் உருவ படத்தை, 10க்கும் மேற்பட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அகற்றினர். பின்னர், கட்சி அலுவலக வாயிலில் அவற்றை உடைத்தும், காலணியால் அடித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், கட்சியை முடக்கும் விதமாக செயல்பட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கண்ட முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இதனால் கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.