
போக்குவரத்து கழக சீரமைப்பு தொடர்பாக திமுகவின் பரிந்துரைகளை ஏற்று செயல்படுத்த முடியாது என மறைமுகமாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, போக்குவரத்து துறையின் நஷ்டங்கள் ஆகியவற்றை காரணம் காட்டி பேருந்து கட்டணத்தை 50 முதல் 100% வரை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைத்து திமுக ஆய்வு செய்தது. அந்த ஆய்வறிக்கையை, முதல்வர் பழனிசாமியை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.
போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக 27 பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கையை ஸ்டாலின் வழங்கினார். அதை பின்பற்றினாலே கட்டண உயர்வு தேவைப்படாது என ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் ஸ்டாலின் வழங்கிய பரிந்துரைகளை அரசு செயல்படுத்துமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், 2006-2011 காலத்திலான திமுக ஆட்சியில் தான் போக்குவரத்துத்துறை கடுமையான நஷ்டத்தை சந்தித்தது. போக்குவரத்து துறைக்கு சொந்தமானவை அடமானத்தில் இருந்தன. அவையனைத்தையும் மீட்டெடுத்து அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்துத்துறையின் நஷ்டத்திற்கு காரணமே திமுக தான். அப்போது இந்த பரிந்துரைகளை ஸ்டாலின் தெரிவித்தாரா? மக்கள் மீதும் போக்குவரத்து கழகத்தின் மீதும் அக்கறை உள்ளவராக இருந்திருந்தால் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் இதை வழங்கியிருக்கலாமே? இப்போதுதான் ஸ்டாலினுக்கு ஞானோதயம் வந்ததா? என பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
இதன்மூலம் திமுகவின் பரிந்துரைகளை ஏற்கமுடியாது என பன்னீர்செல்வம் மறைமுகமாக தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் பரிந்துரைகள் என்ற அளவில் மட்டும் பார்க்காமல், சரியான பரிந்துரைகளை ஏற்று செயல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அவ்வாறு ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட்டால்தான் ஆரோக்கியமான அரசியல் முன்னெடுக்கப்படும். அப்படியில்லை என்றால், ஆரோக்கியமான அரசியல் என்பது தமிழகத்திற்கு அப்பாற்பட்டதாகவே ஆகிவிடும் என அரசியல் நோக்கர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.