கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து துரிதமாக உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர தி.மு.க. அரசினை வலியுறுத்தி வருகிற 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
கோடநாட்டில் அரக்கர் கூட்டம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த இடமான கோடநாடு பங்களாவினை திருக்கோயிலாக கருதியவர்கள் ஒன்றரை கோடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள். கோடநாடு பங்களா முதலமைச்சரின் முகாம் அலுவலகமாக விளங்கியது. மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு, மாண்புமிகு அம்மா அவர்கள் குடியிருந்த கோயிலான கோடநாடு பங்களாவில் 24-04-2017 அன்று நுழைந்த ஓர் அரக்கர் கூட்டம் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி திரு. ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து, மற்றொரு காவலாளி திரு. கிருஷ்ணபகதூர் என்பவரை படுகாயப்படுத்தி, ஒரு கொள்ளை சம்பவத்தை அங்கே நிகழ்த்தியது.
குற்றவாளிகளை தண்டிக்கவில்லை
இதன் தொடர்ச்சியாக மாண்புமிகு அம்மா அவர்களின் கார் ஓட்டுநராக இருந்த திரு. கனகராஜ், கோடநாடு பங்களாவில் கணினி பொறுப்பினை வகித்து வந்த திரு. தினேஷ், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட திரு. சயான் என்பவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்டோர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இந்தக் கொடூரங்கள் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொலைக்கும், கொள்ளைக்கும், மர்ம மரணங்களுக்கும் காரணமான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவோம் எனக்கூறிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்,
விசாரணை என்ன ஆச்சு.?
இது தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த வழக்கினை விரைந்து நடத்தாதது வியப்பை அளிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விரைந்து நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. எனவே, கோடநாடு கொலை, கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மர்ம நிகழ்வுகள் குறித்த வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,
தமிழகம் முழுவதும் போராட்டம்
ஏற்கெனவே அறிவித்தபடி, 01-08-2023 - செவ்வாய்க்கிழமை அன்று காலை 10-30 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணியினர் உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்