
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது அதிமுக அணிகள் இணைப்பு மற்றும் நதிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
அவருடன், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், கே.பி. முனுசாமி, செம்மலை உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
வெங்கைய்யா நாயுடு கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த விழாவில் பங்கேற்பதற்காக ஓ.பி.எஸ். டெல்லி சென்றிருந்தார். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்றிருந்தார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமியை மட்டுமே பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்காததை அடுத்து, ஓ.பி.எஸ், நேற்று மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து டெல்லி புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், 11 மணியளவில் பிரதமரை சந்தித்து பேசி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும், நதிகள் இணைப்பு உள்ளிட்டவை குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறலாம் எனத் தெரிகிறது.