22 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும் : பிரதமருக்கு, முதலமைச்சர் ஓபிஎஸ் கடிதம்!

First Published Dec 21, 2016, 9:47 AM IST
Highlights


இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 7 பேர் உட்பட 22 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு, முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை வசம் உள்ள 109 மீன்பிடி படகுகளை மீட்கவும் வலியுறுத்தியுள்ளார். 

தமிழக முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து, கடலில் மீன்பிடிக்க, 2 இயந்திரப் படகுகளில் கடலுக்குச் சென்ற 7 மீனவர்களை, இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று, இலங்கையில் உள்ள காரை நகர் பகுதியில் சிறை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே பல்வேறு நிலைகளில் அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் போதிலும், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது துரதிர்ஷ்டவசமானது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக மீனவர்களை பாதுகாக்கும் கடமை மத்திய அரசுக்கு உண்டு என்பதை இலங்கை அரசுக்கு உறுதிபட தெரிவிக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 7 மீனவர்கள் உட்பட, இலங்கை சிறைகளில் உள்ள 22 தமிழக மீனவர்களையும், இலங்கை வசம் உள்ள 109 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க, பிரதமர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக இப்பிரச்சனையை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடி தீர்வுகாண வேண்டும் என்றும் முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், பிரதமருக்கு இன்று எழுதிய கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!