
பன்னீர் அணியை பாஜகவில் இணைத்து, அவரையே முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து, தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் பாஜக வை காலூன்ற வைக்க பிரதமர் மோடியும், அமித் ஷாவும் எவ்வளவோ முயற்சிகள் செய்து வருகின்றனர். ஆனால், எதுவும் எதிர்பார்த்த பலனை தரவில்லை.
நடிகர் ரஜினிகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தமிழகத்தில் தேர்தலை சந்திக்க பாஜக ஏற்கனவே திட்டமிட்டது. ஆனால், அவர் எதற்கும் பிடி கொடுக்காமல், கழுவும் மீனில் நழுவும் மீனாக, வழுக்கி, வழுக்கி செல்வதால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.
அதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னிலை ப்டுத்தி, தேர்தலை சந்திக்கலாம் என்று பாஜக திட்டமிட்டது. ஆனால், தமிழக மக்களை கவரும் அளவுக்கு அவர் செல்வாக்கு பெற்ற தலைவராக இல்லை.
அதையடுத்து, அதிமுகவை ஒன்றிணைத்து, அதோடு கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற முடிவுக்கு வந்தது பாஜக. ஆனால் அணிகள் இணைப்புக்காக மேற்கொண்ட முயற்சி, மேலும் சில பிளவுகளை உண்டாக்கி பின்னடைவையே ஏற்படுத்தியது.
அதனால், கடைசியாக, அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து தனி அணியாக செயல் படும், பன்னீர்செல்வத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு பெருகி வருவதால், அவரது அணியை பாஜக வுடன் இணைத்து, அவரையே முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து தேர்தலை சந்திக்கலாம் என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக இருக்கும் பன்னீர் இதற்கு சம்மதிப்பார் என்றே தெரிகிறது. ஒரு வேளை, அவர் சம்மதிக்கவில்லை என்றால், மணல் மன்னன் சேகர் ரெட்டி வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் சம்மதிக்க வைக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது.
சசிகலாவை எதிர்த்த காரணத்தினால், பன்னீருக்கு தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. ஆனால், அவர் பாஜக வுக்கு சென்றால், தொண்டர்களும் அவரை ஆதரிப்பார்களா? என்பது சந்தேகம்தான்.
அதேசமயம், பாஜக வின் நிர்பந்தத்தை ஏற்கவில்லை என்றால், பன்னீர்செல்வத்தின் நிலை மிகவும் பரிதாபமாகிவிடும். எனவே, அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பது தெரியவில்லை.
ஆனாலும், தங்கள் அணி தனித்து இயங்கட்டும், பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு, கேட்கும் தொகுதிகளை தருகிறோம் என்று அதில் இருந்து பன்னீர் தப்பிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.