
அதிமுகவில் பிரிந்து உள்ள இரு அணிகளும் இணைவதில் நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை என அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டீக்கடை நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக அழகு பார்த்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதான். அதை யாரும் மறுக்க முடியாது.
அவர் இறந்த நேரத்தில், கைக்கட்டிவேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது சிபிஐ விசாரணை வேண்டும் என கூறுகிறார். இது அதிமுகவுக்கு இழைக்கும் துரோகம். சிபிஐ விசாரணையே தேவையில்லை.
உடல்நலக்குறைவால்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் உடல் முழுவதும் குழாய்கள் பொருத்தி சிகிச்சை பெற்றார். இருதய அடைப்பு ஏற்பட்டதால் தான் அவர் உயிர் இழந்தார்.
ஜெயலலிதாவை காப்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சசிகலா. ஆனால், அவரது சந்தர்ப்ப சூழ்நிலை சரியில்லாமல் போனதால், அவர் சிறைக்கு சென்றுவிட்டார்.
டிடிவி.தினகரன் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெறுவார் என உளவுத்துறை தெரிவித்தது. இதனால், பயந்துபோன பாஜக தேர்தலை ரத்து செய்ய தூண்டிவிட்டது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதற்காக ‘ஓய்’ பாதுகாப்பை மத்திய அரசு கொடுக்க வேண்டும். அவர் திமுகவுடன் இணைந்து, அதிமுகவை திட்டமிட்டு அழிக்க நினைக்கிறார்.
பன்னீர்செல்வத்துடன் இருக்கும் 10 எம்எல்ஏக்களும் விரைவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர். ஓ.பி.எஸ். அணி விரைவில் காணாமல் போய்விடும். கட்சி தலைவிதியை நாங்களே தீர்மானிப்போம். அதிமுக பயணம் தொடரும், யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.