கலைஞர் உணவகத்தை குறை சொல்லும் தகுதி ஓபிஎஸ்-க்கு இல்லை… போட்டுத்தாக்கிய ஆர்.எஸ்.பாரதி!!

Published : Nov 27, 2021, 06:55 PM IST
கலைஞர் உணவகத்தை குறை சொல்லும் தகுதி ஓபிஎஸ்-க்கு இல்லை… போட்டுத்தாக்கிய ஆர்.எஸ்.பாரதி!!

சுருக்கம்

கலைஞர் உணவகத்தை குறை சொல்லும் தகுதி ஓபிஎஸ்-க்கு இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

கலைஞர் உணவகத்தை குறை சொல்லும் தகுதி ஓபிஎஸ்-க்கு இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்மைக் காலமாக ஓ.பி.எஸ். போன்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மீது உள்ள அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளிவர தொடங்கியுள்ள காரணத்தால், அதனை திசைத் திருப்பும் நோக்கோடு,  தி.மு.க.மீதும், ஆட்சிமீதும் சேற்றை வாரி இறைப்பதைப் போல அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, ஓ.பி.எஸ். மீது, அரசுக்குச் சொந்தமான இடத்தை தனது குடும்பத்திற்கு  வேண்டப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு அடிமாட்டு விலைக்கு அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும் சில நாட்களுக்கு முன்பு, அவசர அவசரமாக விற்று, அதன்மூலம்  500 கோடி ரூபாய்க்கு மேல், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது தொடர்பாக தி.மு.க. கொடுத்த புகார் அடிப்படையில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. அதைபோல், பண மதிப்பிழப்பின் போது சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் மூலமாக 82 கோடி ரூபாய் வருமான வரி கட்ட வேண்டுமென்று அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். வழக்கு தொடர்ந்த நிலையில், அம்மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த 82 கோடி ரூபாய் வருமான வரி விதிக்கப்பட்டதின் விளக்கங்களை மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இப்படி, ஒன்றின் பின் ஒன்றாக, தான் ஆட்சியில் இருந்தபோது செய்த முறைகேடுகள், ஊழல்கள், லஞ்சலாவண்யங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியுள்ள நிலையில், அதனை மறைக்கும் விதமாகவும் குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்ற ஆதங்கத்தின் காரணமாகவும், தி.மு.க.மீதும் திமுக ஆட்சியின் மீதும், அர்த்தமற்ற அவதூறான புகார்களை அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். டெல்லியில் உணவுத் துறை அமைச்சர்  சக்கரபாணி, தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தார். இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றுதான். மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்தி வருகின்றார். அவற்றில் ஒன்றுதான் உணவுத் துறை அமைச்சர் அறிவித்த 500 கலைஞர் உணவகங்கள். இதுகுறித்து, ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. கலைஞர் உணவகம் தொடங்கப்படுவதன் நோக்கம் என்ன என்பதை அமைச்சரே விளக்கமாக எடுத்துரைத்திருக்கிறார். ஆனால், ஓ.பி.எஸ். உண்மைக்குப் புறம்பாக அம்மா உணவகத்தை இருட்டடிப்பு செய்வதற்காக இத்திட்டம் அறிவிக்கப்படுகிறது என்று சொல்வது அர்த்தமற்றதாகும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுக் கூடம் என்று ஒரு திட்டம் இருந்தபோதே, அம்மா உணவகம் என்று ஒன்றை கொண்டு வந்தது, எம்.ஜி.ஆர். புகழை மறைப்பதற்காகவா? என்பதை ஓ.பி.எஸ். விளக்க வேண்டும். எம்.ஜி.ஆர்.சத்துணவுக் கூடம் இருக்கும்போதே, அம்மா உணவகம் எப்படி தொடங்கப்பட்டதோ, அதைப் போலத்தான் கலைஞர் உணவகம். அம்மா உணவகத்தின் நீட்சிதான்.

அதைப்போலவே, முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றான சமச்சீர் கல்வி. புத்தகத்தில் கலைஞர் படம் இருந்த காரணத்தால், பல கோடி ரூபாய் செலவிடப்பட்டடு அச்சிடப்பட்ட பள்ளி புத்தகங்களை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அழித்ததோடு அல்லாமல், அனைத்தையும் அழித்த ஜெயலலிதாவைப் போலில்லாமல், அம்மா உணவகம் என்ற பெயர் அப்படியே தொடரவும், அதில் ஜெயலலிதா படத்தை அதிலிருந்து எடுக்கக் கூடாது என்று தலைவர் ஆட்சிக்கு வந்ததும், பெருந்தன்மையாக நடந்து கொண்டதையும் அதைப் போலேவே, பல கோடி ரூபாய் செலவில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிட தயாரிக்கப்பட்ட பள்ளி பையில், ஜெயலலிதா, எடப்பாடி படத்தை அச்சிட்டதை, அப்படியே தொடர அனுமதித்து அதனை மாணவர்களுக்கு வினியோகித்த பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழக முதல்வர் அரசு கொண்டு வந்த அம்மா உணவகத்தின் நீட்சியான கலைஞர் உணவகத்தை குறை சொல்லும் தகுதியோ, யோக்கியதையோ ஓ.பி.எஸ்.சுக்கு இல்லை. ஓ.பி.எஸ்., மு.க.ஸ்டாலின் மீது குற்றஞ்சாட்டி, ஒரு விரலை மு.க.ஸ்டாலின் மீது சுட்டிக்காட்டும் நேரத்தில், மற்ற மூன்று விரல்கள் ஜெயலலிதாவை சுட்டிக்காட்டுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ஓ.பி.எஸ்.  இதுபோன்ற வெற்று அறிக்கை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!
50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!