
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமான ஓ.பன்னீர்செல்வம்தான் என்று பொன்னையன் அதிரடியாக தெரிவித்தார்.
அதிமுக என்னும் பேரியக்கம் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு மாறாக ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் விருப்பத்திற்கு மாறாக சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
இதை ஏற்றுகொள்ள முடியாது. இந்த நியமனம் செல்லாது. பொதுச்செயலாளர் நியமனமே செல்லாத நிலையில், அவர் எடுத்த நடவடிக்கைகளும் செல்லாது.
அதிமுக கட்சி விதிகளின் படி பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது என்று முறைப்படி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து நல்ல முடிவு வரும்.
ஒன்றரை கோடி தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஓ.பி.எஸ் பொதுச்செயலாளராக வருவார்.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.
அதிமுகவில் புதிய மாற்றமாக பொதுச்செயலாளராக ஓ.பி.எஸ் முன்னிருத்தபடுகிறார். இதன் மூலம் சசிகலா தரப்பினருக்கு புதிய சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது.
அதிமுக கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் நேரடியாக தொண்டர்கள் வாக்களித்து தேர்வு செய்யபடுவார்.
அப்படி ஒரு நிலை வந்தால் ஓ.பி.எஸ் அடிமட்ட தொண்டர்களின் ஆதரவுடன் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற வாய்ப்புள்ளது.
சசிகலா பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்தால் சசிகலாவால் நீக்கபட்ட ஓ.பி.எஸ், மதுசூதனன், பொன்னையன் உள்ளிட்ட அனைவரின் நீக்கமும் ரத்தாகும். செங்கோட்டையன் , டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் நியமனமும் ரத்தாகும்.
இதனால் மீண்டும் ஒரு பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.