
நேற்று நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டதாக கட்சியினர் மத்தியில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
பேசியே சாதித்த பல தலைவர்கள் தமிழக அரசியலில் இருக்கிறார்கள் , ஆனால் பேசாமல் மவுன புன்னகையினாலேயே சாதித்தவர் என்றால் அது ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே.
ஜெயலலிதாவுக்கு இக்கட்டான தருணங்களில் நம்பிக்கையானவராக இருந்தவர் ஓபிஎஸ். இவர் ஜெயலலிதா ஆள் என்றால் ஜெயலலிதா ஆள் , சின்னம்மா ஆள் என்றால் சின்னம்மா ஆள். இவர் என்ன நினைக்கிறார், யார் மீது என்ன கருத்து வைத்துள்ளார் என்பதை யாராலும் அறிய முடியாது. ஆனால் கட்சியில் தன்னை சிறிது சிறிதாக வளர்த்து கொண்டார்.
இடையில் இவரை சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா ஓரங்கட்டியதாக சொல்லப்பட்டது. ஆனால் மீண்டும் நிதியமைச்சராக ஓபிஎஸ் நியமிக்கப்பட்டார். அவை முன்னவராக திறம்பட எதிர்கட்சிகளை லாவகமாக சமாளிக்கும் திறன் கற்றவர் ஓபிஎஸ்.
ஜெயலலிதா மறைவின் போது மக்களால் அங்கீகரிக்கப்படும் ஒரு முதல்வர் வேண்டும் என்பதால் ஓபிஎஸ் கொண்டுவரப்பட்டார். சசிகலாவை கடுமையாக விமர்சித்த யாரும் ஓபிஎஸ்சை விமர்சிக்கவில்லை.
பொதுமக்களும் ஜெயலலிதாவுக்கு பின்னர் இவரா? என்று எங்கும் விமர்சிக்கவில்லை. இது ஓபிஎஸ்சுக்கு பெரிய அங்கீகாரம் ஆகும். எவ்வித பின்னனியும் இல்லாமல் முதல்வர் பதவிக்கு வந்த ஓபிஎஸ் ஜெயலலிதா இல்லாத நேரத்தில் வார்தா புயல் பாதிப்பில் புயல் வேகத்தில் இயங்கி பொதுமக்களை திரும்பி பார்க்க வைத்தார்.
பத்திரிக்கையாளர்களை சந்திப்பது , சாதாரணமாக இருப்பது இவருக்கு மேலும் மதிப்பை கூட்டியது. முதல்வர் பதவியில் சின்னம்மா வர வேண்டும் என தீர்மானம் போட்டு அமைச்சரவை சகாக்களே பேட்டி அளித்த போதும் மவுனமாக தன் வேலையை ஓபிஎஸ் பார்த்து வந்தது மற்றவர்களை ஆச்சர்யப்பட வைத்தது.
அட இப்படி பேசலாமா இது முறையா என எல்லா மட்டத்திலும் விமர்சனங்கள் எழுந்தது. போலீஸ் உளவுத்துறை ரிப்போர்ட்டும் கார்டன் தரப்புக்கு எதிராக இருந்ததால் இனி அமைச்சர்கள் இப்படி பேட்டிகொடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
இப்போது அப்போது என சசிகலா முதல்வர் பதவி ஏற்பு ஓபிஎஸ்சின் மரியாதை கூடி வருவதால் தள்ளி செல்கிறது. மத்திய அரசின் கைப்பிள்ளை என்ற விமர்சனத்தையும் வழக்கமான தனது மவுனசிரிப்பு மூலம் மற்றவர்களின் யூகத்திற்கே விட்டுவிட்ட ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் மக்களிடம் இவர் நம்பகமானவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார் என்பது அனைவரும் ஒத்துகொள்ளும் கருத்தாக உள்ளது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் வன்முறை தூண்டிவிடப்பட்டது கூட ஓபிஎஸ்சுக்கு அந்த பெருமை சென்று சேர்ந்து விடக்கூடாது எனபதில் சிலர் செய்த உள்ளடி வேலை என்று கட்சிக்குள் ஒரு பேச்சு ஓடுகிறது.
எது எப்படியோ சாதித்து விட்ட ஓபிஎஸ் தனக்கு கிடைக்கும் அவமானங்களையும் மவுன சிரிப்பு மூலம் பேச வைத்து விடுகிறார். ஒரு முதல்வராக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சென்ற ஓபிஎஸ் திருப்பி அனுப்ப பட்டார்.
மற்ற தலைவர்கள் என்றால் எதிர்கட்சி சதி என்றிருப்பார்கள். ஆனால் ஓபிஎஸ் அங்குள்ள மக்கள் என்று விரும்புகிறார்களோ அன்று ஜல்லிக்கட்டு என்று இயல்பாக சொல்லிவிட்டு கிளம்பினார்.
மவுனசாமியார் என்றாலும் பேச வேண்டுடிய நேரத்தில் குறைவில்லாமல் பேசுகிறார் ஓபிஎஸ்.ஒரு பைலும் கையெழுத்துக்காக நிற்பதில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
நீ என்ன முதல்வராக இருந்தாலும் நாங்கள் நினைத்தால் நீங்கள் ஒன்றுமில்லை என்பது போல் ஓபிஎஸ் பல முறை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறார். இது ஓபிஎஸ்சுக்கு சிறுமை என்பதை விட அவரை அப்படி நடத்துபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதே நடைமுறை.
சமீபத்தில் இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் முன்பே வந்துவிட்ட முதல்வர் ஓபிஎஸ் சசிகலா வந்தபோது பத்தோடு பதினொன்றாக கும்பலோடு சென்ற வீடியோ காட்சிகள் வெளியானது.
இந்நிலையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் மேடையில் அமரவைக்கப்படாமல் கீழே மற்றவர்களுடன் உட்காரவைக்கப்பட்டார்.
வழக்கம் போல் அதே புன்னகையுடன் ஓபிஎஸ் அமர்ந்திருந்தார். மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவர் கட்சியில் அனைத்துமாக இருந்தாலும் நிர்வாகிகளுக்கு உரிய மரியாதையை கொடுத்தே வந்துள்ளார்.
எம்.எல்.ஏ கூட்டத்தில் எம்.எல்.ஏக்களுக்கு தலைமை தாங்குபவர் மேடையில் அமராமல் கீழே உட்காரவைக்கப்பட்டது தற்போது கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் ரியாக்ஷன் வழக்கம் போல் “”இதுவும் கடந்து போகும் “” என்பது போல் அமர்ந்திருந்தார்.