பொதுக்குழுவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திற்கான ஆதரவு தொண்டர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திற்கான ஆதரவு தொண்டர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11ஆம் தேதி பொதுக்குழு நடக்காது என்றும் கூறியுள்ள அவர் இபிஎஸ் அணியில் இருந்தவர்கள் இப்போது ஓபிஎஸ்சை நோக்கி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் இபிஎஸ் என்ற இரட்டைத் தலைமையின் கீழ் அதிமுக இயங்கிவரும் நிலையில், ஒற்றை தலைமை என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. எனவே கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நீதிமன்றத்தில் அதுபோன்ற புதிய தீர்மானங்கள் எதையும் நிறைவேற்ற அனுமதி இல்லை என உத்தரவு பெற்றதன் அடிப்படையில் அது தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆனால் வரும் 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடக்கும் என இபிஎஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர். ஆனால் ஓபிஎஸ் தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் ஒருங்கிணைப்பாளர் கையொப்பம் இல்லாமல் பொதுக்குழு அறிவிக்க முடியாது என்றும், அப்பொதுக் குழு செல்லாது என்றும் கூறிவருகின்றனர். இது ஒருபுறம் உள்ள நிலையில் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரும் அவருக்கு உறுதுணையாக செயல்பட்டு வருபவருமான வைத்தியலிங்கம் வரும் 11ம் தேதி பொதுக்குழு நடைபெறாது என கூறியுள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வதற்கு முன்பாக 6 மணிக்கெல்லாம் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத 600க்கும் மேற்பட்டர் மேடைக்கு முன்புறம் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள்தான் அந்த பொதுக்குழுவில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். ஆனால் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் எந்த வார்த்தையும் பேசவில்லை, பணம் கொடுத்து அழைத்து வந்தவர்களே அந்த நிகழ்ச்சியில் கலவரம் செய்தனர்.
மொத்தத்தில் அது ஜனநாயகத்திற்கு விரோதமாக நடத்தப்பட்ட கூட்டமாகும், எனவே நீதிமன்ற புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என உத்தரவு வழங்கியிருந்தும் சில தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது, அதை எதிர்ப்பதாக கூறித்தான் வெளிநடப்பு செய்தோம், இப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ்சின் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். வருகிற 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறாது, பொதுக்குழுக் கூட்டம் நடந்து முடிந்த பிறகு அங்கு நடந்த சம்பவங்கள் ஓபிஎஸ்-க்கு சாதகமாக அமைந்துள்ளது அந்தக் கூட்டத்திற்கு பிறகு தொண்டர்கள் மத்தியில் ஓபிஎஸ்சின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.