
கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஓ.பி.எஸ். தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சசிகலாவை சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்ந்தெடுத்தனர்.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன் ஒ.பன்னீர்செல்வம் இரவு நேரத்தில் ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அங்கு சுமார் ஒரு மணிநேரம் தியானம் செய்த அவர், திடீரென சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதனால், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து முன்னாள் சபா நாயகர் பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் உள்பட முன்னாள் மற்றும் இன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து, அவரது வீட்டுக்கு சென்றனர்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிந்ததும், அனைவரையும் சொகுசு பஸ்களில் ஏற்றி, புறநகர் பகுதியான கல்பாக்கம் அருகே கூவத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளதாக தகவல் பரவியது.
மேலும், அதே பஸ்சில், தனியார் ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட எம்எல்ஏ சண்முகநாதன், கிரீன்வேஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, தப்பிவிட்டார். அங்கிருந்து அவர், ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குசென்று தஞ்சமடைந்தார். மேலும், தனியார் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டு இருந்த அவை தலைவர் மதுசூதனனும், அங்கிருந்து தப்பி வந்து, ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், சசிகலாவுக்கு முதலமைச்சர் பதவி கொடுப்பதில் விருப்பம் இல்லாத அதிமுக தொண்டர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவரது வீட்டுக்கு ஏராளமானோர் சென்று கொண்டே இருக்கின்றனர்.
அதன்படி நேற்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்க வந்த தொண்டர்களுக்கு காலை, மதியம், இரவு என அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மதியம் கோழி பிரியாணி வழங்கினார். மேலும் குடிநீர் பாட்டில், டீ வழங்கப்படுகிறது.
தொண்டர்களுக்கு அசவுகரியம் ஏற்படாமல் இருக்க, சாமியானா பந்தலும் அமைத்து, அதன் கீழ் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தனக்கு ஆதரவு தரும் தொண்டர்களின் பெயர், செல்போன் எண், ஊர் ஆகிய விசாரித்து குறித்து வைத்து கொள்ளப்படுகிறது.