ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்கு எடப்பாடி அணியினர் கற்பித்து விட்டனர். இனி இணைப்பே இல்லை என்ற உத்தரவாதத்தை தொண்டர்களாகிய உங்களுக்கு நான் அளிக்கிறேன் என தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்த்து வாக்களித்தால் என்ன நடந்திருக்கும்.?
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஓபிஎஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. அமைப்பு ரீதியாக 76 மாவட்ட செயலாளர்கள் இந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கோவையில் மாநாடு நடத்த வேண்டும் என கோரினர். சில மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் நடத்திய போது நான் மட்டும் நினைத்திருந்தால், அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தால் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்திருக்கும்.
இபிஎஸ் படாத பாடு படுத்தினார்
ஒற்றுமையாக இருக்கலாம் என எடப்பாடி தரப்பு சொன்னதை நம்பி அவர்களுடன் இணைந்தோம், ஆனால் நான்காண்டு காலம் எடப்பாடி பழனிசாமி நம்மை படாதபாடு படுத்தினார். பல துரோகங்களை செய்ததாக கூறினார். எடப்பாடி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்கு கற்பித்து விட்டனர். இனி இணைப்பே இல்லை என்ற உத்தரவாதத்தை தொண்டர்களாகிய உங்களுக்கு நான் அளிக்கிறேன் என கூறினார். மேலும், கொங்கு மண்டல மாநாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தார்.
பாஜகவிற்கு தொண்டராக இருக்க வேண்டிய தேவை இல்லை
இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிசாமியுடன் ஒருமுறை இணைந்ததால் அனுபவித்த கொடுமையை நம்மை விட ஓபிஎஸ் நன்கு அறிவார். ஆகவே எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கூறினார். பாஜகவிற்கு நாம் தோழமையாக இருக்கலாம் ஆனால் தொண்டர்களாக இருக்க முடியாது என கூறிய அவர், பாஜகவை பகைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை, அதேபோல அவர்கள் தயவுக்காக காத்திருக்க கூடிய அவசியமும் நமக்கு இல்லை என்று கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி.?
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமசந்திரன், பாஜக கூட்டணியில் உள்ளீர்களா என்ற கேள்விக்கு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் .தேர்தல் ஜுரம் வந்த பிறகு கூடடனி குறித்து பேசுவோம். பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர் என கூறினார். ஓபிஎஸ் திமுகவின் B- டீம் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்தவர். நாங்கள் திமுகவின் B - டீம் அல்ல, எடப்பாடி பழனிசாமி தான் A-Z டீம். எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்று உங்களுக்கே தெரியும் என கூறினார். ஆளுநரின் அத்தகைய செயல்பாடு சரியானதாக இல்லை என மத்திய அரசே சொல்லி தான் ஆளுநர் அந்த உத்தரவை நிறுத்தி வைத்திருக்கிரார் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்