அகவிலைப்படி உயர்வுக்கே ஊழியர்களை அல்லல்பட வைத்த திமுக அரசு.! ஜனவரியில் இருந்து அகவிலைப்படியை வழங்கிடுக-ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published May 18, 2023, 10:34 AM IST

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நான்கு விழுக்காடு அகவிலைப்படி உயர்வினை 01-01-2023 தேதியிலிருந்து தி.மு.க. அரசு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்குவது என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறை. அரசு ஊழியர்களுக்கு "அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்” என்று வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, இன்று அகவிலைப்படி உயர்விற்கே அவர்களை அல்லல்பட வைத்திருக்கிற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

Latest Videos

undefined

மூன்று மாதம் காலந்தாழ்த்தி அறிவிப்பு

இந்தச் சூழ்நிலையில், 01-01-2023 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01-01-2023 முதல் வழங்க வேண்டும். ஆனால், இந்த 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு 01-04-2023 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  அதாவது, மூன்று மாதம் காலந்தாழ்த்தி அகவிலைப்படி உயர்வை அரசு வழங்கி இருக்கிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மூன்று அகவிலைப்படி உயர்வுகளை ஆறு மாதத்திற்கு தள்ளிப் போட்ட தி.மு.க. அரசு, நான்காவது அகவிலைப்படி உயர்வை மூன்று மாதத்திற்கு தள்ளிப் போட்டு இருக்கிறது. 

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசிக்கு ஏற்ப வழங்கப்படும் உயர்வு ஆகும். இதனைக் காலந்தாழ்த்தி வழங்குவது என்பது ஏற்புடையதல்ல. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி விட்டு, 'நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுவிட்டது, 'வருவாய்ப் பற்றாக்குறை குறைந்துவிட்டது என்று கூறுவது நிர்வாகத் திறமையின்மையின் வெளிப்பாடு. இது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் அறிவிக்கையை மேற்கோள்காட்டி ஆணை வெளியிடப்பட்டால்தான், மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை உணர்த்துவதாக அமையும். இல்லையெனில், மாநில அரசு தனிவழியை பின்பற்றுகிறது என்பதுபோல் ஆகிவிடும். 

உரிமையே தவிர கருணை அல்ல

இதுபோன்ற நடவடிக்கையின்மூலம், அகவிலைப்படி உயர்வை தன் விருப்பப்படி அளிக்க அரசு முனைகிறதோ என்ற ஐயமும் அரசு ஊழியர்கள் மத்தியில் எழும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என்பது உரிமையே தவிர கருணை அல்ல. அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், எதிர்வரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரியில் இருந்து அகவிலைப்படி

இருப்பினும், இந்த முறையே மத்திய அரசு அறிவித்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே நிலவுகிறது. இதனை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது அறிவித்துள்ள 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01-01-2023 தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அகவிலைப்படி உயர்வு ஆணையில் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

535 கோடி ரூபாய் பணத்துடன் நடு ரோட்டில் பழுதாகி நின்ற லாரி.! அதிர்ச்சியில் வங்கி அதிகாரிகள்- அலர்டான போலீஸ்

click me!