
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மக்களிடம் நியாயம் கேட்க விரைவில் நீதி பயணம் துவங்க உள்ளதாக பொன்னையன் அறிவித்தார்.
கடந்த 5 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஏற்பட்ட அசாதாரமான சூழ்நிலையில் சசிகலா ஓ.பி.எஸ் என இரு பிரிவாக கட்சி பிரிந்த சூழ்நிலையில் யார் ஆட்சி அமைப்பது என்ற பிரச்சனை வலுவாக இருந்து வந்தது.
முதலமைச்சாராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கும் எம்.,எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டனர். தங்களது ஆதரவாளர்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதிபடுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி சசிகலா ஆதரவாளர்களால் தேர்வு செய்யப்பட்டார். நேற்று ஆளுனரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோரினார்.
பின்னர், இன்று திடீரென ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவி ஏற்க அனுமதி கொடுத்து 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி இன்று மாலை 4 மணிக்கு அவர் பதவியேற்கிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ், மக்கள் மற்றும் தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆட்சி அமைந்துள்ளது. ஒரு குடும்பத்தினர் கையில் ஆட்சியை கொண்டு செல்ல விடமாட்டோம் என தெரிவித்தார்.
இதனிடையே முதலமைச்சர் பன்னீர்செல்வம் மக்களிடம் செல்ல முடிவெடுத்துள்ளதாக பொன்னையன் தெரிவித்தார். விரைவில் முதல்வர் ஓ.பி.எஸ் நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பயணம் செல்ல உள்ளார். தொகுதி வாரியாக கிராமம் வாரியாக பொதுமக்களை ஓ.பி.எஸ் சந்தித்து நீதி கேட்பார் என்று பொன்னையன் தெரிவித்தார்.