தப்புமேல தப்பு பண்றார் OPS.. எம்ஜிஆர் பாட்டு பாடி வார்னிங் கொடுத்த ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2022, 2:59 PM IST
Highlights

எடப்பாடிக்கு ஆதரவு பெருகி விட்டது என்பதை அறிந்தும் ஓ.பன்னீர்செல்வம் தவறுக்கு மேல் தவறு செய்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

எடப்பாடிக்கு ஆதரவு பெருகி விட்டது என்பதை அறிந்தும் ஓ.பன்னீர்செல்வம் தவறுக்கு மேல் தவறு செய்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். " பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர்கள் சென்றது இல்லை" என்ற எம்ஜிஆரின் பாடலை பாடி பன்னீர் செல்வம் தவறான பாதையில் செல்வதாக அவர் விமர்சித்தார்.

கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வலுவாக எழுப்பிவருகின்றனர்.இந்நிலையில் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மறுபுறம் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மத்தியில் தனக்கு ஆதரவு இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஓ. பன்னீர்செல்வம் தற்போதுள்ளபடியே இரட்டை தலைமை நீடிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

எனவே நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓற்றைத் தலைமையாக நியமிக்கப்படலாம் என்பதை உணர்ந்துகொண்ட அவர், பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் நேற்று ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் எழுதிய நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என காவல்துறை நிராகரித்துவிட்டது. எப்படியும் பொதுக்குழுவை தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. 

இனி என்ன செய்வது என்ற கையறு நிலையில் அவர் குழப்பத்தில் இருந்து வருகிறார். எனவே தனது கடைசி ஆயுதமான தர்மயுத்தம் 2.0 அவர் கையில் எடுக்கக் கூடும் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.  இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளருமான ஜெயக்குமார், பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.

எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு, பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் மூன்று அம்சங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், அழைப்பிதழ் புகைப்படத்துடன் கூடிய ஐடி கார்டு ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இருத்தல் வேண்டும், ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்கள் மத்தியில் உள்ள கோரிக்கையை ஆகும், எனவே ஒற்றைத் தலைமையில் எடப்பாடிபழனிசாமியை அமர வைக்க தமிழகம் முழுவதும் உள்ள 17 அணிகள் 75 மாவட்ட நிர்வாகிகள் இபிஎஸ் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது அனைத்தும் தெரிந்திருந்தும் ஓ.பன்னீர்செல்வம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார். பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர்கள் சென்றதில்லை (எம்ஜிஆர் பாடல்) ஓபிஎஸ் தவறான பாதையில் செல்கிறார், தப்பிற்கு மேல் தப்பு செய்கிறார் என எச்சரித்தார். இதேபோல் ஓ.பன்னீர் செல்வத்தை பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்து எடப்பாடிபழனிசாமி அவருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில்,  ஒருங்கிணைப்பாளர்கள் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும், இருவரும் திட்டமிட்டபடி பொதுக்குழு நடந்தாக வேண்டும், இருவரின் ஒப்புதலின்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் திடீரென பொதுக்குழு நடத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி அதை ஒத்திவைக்க வேண்டும் என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுக் குழு நடத்துவதால் பிரச்சினை ஒன்றுமில்லை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவிற்கு சூழ்நிலை இல்லை என  எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்சிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலைக்குள் பொதுக்குழு தொடர்பாக தனது முடிவை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!