புழலில் இருந்து புயலாய் கிளம்பிய ஜெயக்குமார்...! வீட்டிற்கே ஓடி சென்று பார்த்த ஓபிஎஸ்- ஈபிஎஸ்

By Ajmal KhanFirst Published Mar 12, 2022, 11:44 AM IST
Highlights

19 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு சிறையிலிருந்து வீடு திரும்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குச் சாவடி ஒன்றில் திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக உறுப்பினர் நரேஷ் என்பவரை தாக்கி அரைநிர்வாணம் படுத்தியதாக  புகார் எழுந்தது. இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்   முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்து கொண்டிருந்த  நிலையில் அரசு விதிமுறைகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி மற்றொரு வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

 

இந்த இரண்டு வழக்கிலும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு  ஜாமீன் பெறப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்து விடலாம் என்று நினைத்திருந்த நிலையில் ஜெயக்குமாருக்கு மற்றொரு  அதிர்ச்சி காத்திருந்தது.  மகேஷ் என்பவருக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை மிரட்டி அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டதால்  ஜெயக்குமார் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் ஜெயகுமார் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தினர்

 புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி சந்தித்து தங்களது ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டனர்.  இதனையடுத்து தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பான வழக்கில் ஜாமின் மனு தொடர்ந்து நிராகரிப்பட்டு வந்த நிலையில்,   நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.  திருச்சியில் தங்கியிருந்து வாரம் மூன்று நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  இதனையடுத்து இன்று புழல் சிறையில் இருந்து வெளியான ஜெயக்குமாருக்கு  அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.  இதனையடுத்து பட்டினம்பாக்கம்  வீட்டிற்கு வந்த  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து பேசினார் அப்போது வழக்கு விவரங்களையும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் ஜெயக்குமார் தெரிவித்தார்.  ஜெயிலில் அடைக்கப்பட்ட 19 நாட்கள் அனுபவங்களையும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்யிடம் ஜெயக்குமார் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

click me!