பிரிந்து சென்றவர்கள் அதிமுகவுக்கு திரும்புங்கள்... ஓ.பி.எஸ்.,-இ.பி.எஸ். அழைப்பு

By manimegalai aFirst Published Oct 27, 2018, 6:38 PM IST
Highlights

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வர வேண்டும் என்றும் கருத்து வேறுபாடுகளை மறந்து விட்டு கட்சி பணியாற்ற வரவேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளன

தற்போது அதிமுக தலைமை கழகத்தில் இருந்து செய்தி குறிப்பு வெளியாகி உள்ளது. அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வமும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கூட்டாக இணைந்து இந்த செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அந்த தீர்ப்பால் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். அது குறித்தும் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், கருத்து வேறுபாடுகளை மறந்து விட்டு கட்சி பணியாற்ற வர வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு கட்சிக்கு திரும்புங்கள். நீர் அடித்து நீர் விலகுவதில்லை என்ற பழமொழிக்கேற்ப கட்சிக்கு திரும்புங்கள். மனமாச்சாரியங்களையும், வேறுபாடுகளையும், புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட வேண்டும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மகத்தான மக்கள் இயக்கத்தில் மீண்டும் வந்து இணைய வேண்டும். ஜெ.வின் கனவுகளை நனவாக்கும் இயக்கமாக விசுவரூபம் எடுத்து அரசியல் எதிரிகளை வீழ்த்தும். உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிமுகவினருக்கும், தமிழக மக்ளுக்கும் உற்சாகத்தை தந்துள்ளது. 

பேரியக்கம் புதிய புறநானூறு படைக்கும் ஆற்றல் கொண்ட இயக்கம். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையாக அன்பும், பாசமும் கொண்டு சகோதர உணர்வுடன் மக்கள் பணியாற்ற வருகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் கூறும்போது, மீண்டும் பாழுங்கிணற்றில் விழ மாட்டோம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

click me!