
கடந்த 5ஆம் தேதி பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் எனவும் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து அ.தி.மு.க. பொதுசெயலாளர் கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 130 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகின.
இருந்தாலும் அனைத்து எம்.ஏக்களும் மனசாட்சியுடன் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
மேலும் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், எனக்கு ஆதரவு தெரிவிக்க எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் பேசி வருவதாகவும், ஜெயலலிதாவின் மரணம் குறித்த மருத்துவர்களின் பதிலில் மக்களுக்கு திருப்தி இல்லை எனவும் தெரிவித்தார்.
எனவே, உண்மை தெரியவேண்டும் என்பதற்காக விசாரணைக் கமிஷன் பற்றி கூறியதாகவும், மக்களின் சந்தேகத்தைப் போக்கும் பொறுப்பில் நான் இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா ஒருமுறை என்னிடம் பேசும்போது, நீங்களாவது விசுவாசமாக இருங்கள் என கூறினார். அப்போது எனக்கு கண்ணீர் வந்தது.
கட்சியில் விரிசல் உருவாக நான் காரணம் இல்லை. முதல்வர் பதவி பற்றி பேசி அமைச்சர்கள்தான் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளார்.