கட்டுக்கதைகளின் தொகுப்புதான் ஆளுநர் உரை... போட்டுத்தாக்கிய ஓ.பன்னீர்செல்வம்!!

By Narendran SFirst Published Jan 5, 2022, 8:33 PM IST
Highlights

வருங்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையில்லாத, எதிர்காலத் தலைமுறையைப் பற்றிச் சிந்திக்காத, எதற்கும் உதவாத கட்டுக் கதைகளின் கூட்டுத் தொகுப்புதான் ஆளுநர் உரை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். 

வருங்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையில்லாத, எதிர்காலத் தலைமுறையைப் பற்றிச் சிந்திக்காத, எதற்கும் உதவாத கட்டுக் கதைகளின் கூட்டுத் தொகுப்புதான் ஆளுநர் உரை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டுமென்ற கனவோடு, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழவேண்டுமென்ற ஓர் இலட்சியத்தோடு, ஒரு தொலைநோக்குப் பார்வையோடு ஆளுநர் உரை அமைய வேண்டும் என்பதும், அந்தத் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதும் தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. தமிழக மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இந்த ஆளுநர் உரையில் ஏதாவது இருக்கிறதா என்று நானும் ஆராய்ந்து பார்த்தேன். ஆனால், அதற்கான விடை பூஜ்யம் தான். இந்த ஆளுநர் உரையில்,  திமுக அரசு பொறுப்பேற்ற போது கோவிட் தொற்றுக்கான தடுப்பூசிகளுக்குத் தகுதியானவர்களின் 8.09 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2.84 சதவீத மக்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் என்று குறைந்த அளவிலேயே செலுத்தப்பட்டிருந்ததாகவும், திமுக அரசின் சீரிய முயற்சிகளால் கடந்த ஏழே மாதங்களில் 86.95 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 60.71 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டதே 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தான் என்பதையும், அதற்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தது மூன்றரை மாதம்தான் என்பதையும், அதிலும் இரண்டு மாதம் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருந்தது என்பதையும், தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்பட்ட போது தடுப்பூசிக்கு எதிராக திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் விஷமப் பிரச்சாரம் செய்ததன் விளைவாக பொதுமக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் இருந்தது என்பதையும் மறைத்து திமுக சாதனை செய்தது போல ஆளுநர் உரையில் காண்பிக்கப்பட்டுள்ளது நகைப்புக்குரியதாக உள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததற்குக் காரணமே திமுகவும், அதன் இரட்டை வேடமும்தான். ஆளுநர் உரையிலே கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 50,000 ரூபாயை நிவாரண நிதியாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்திருந்த நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலில் பாரதப் பிரதமரிடத்தில் வைத்தவன் நான். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இழப்பீடு வழங்குவதை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில்தான் இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க, தமிழ்நாடு அரசே முன் வந்து செய்ததைப் போன்ற தோற்றம் ஆளுநர் உரையிலே உருவாக்கப்பட்டு இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் சில பகுதிகளில் சேதமடைந்த நிலையில் , பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரைத் தீர்க்கவும், மறுபயிரிடச் செய்யத் தேவையான இடுபொருட்களை வாங்கவும் ஒரு ஹெக்டேருக்கு 6,038 கோடி ரூபாய் இழப்பீடு அரசு அறிவித்துள்ளது என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பு அறிவிப்பாகத்தான் உள்ளதே தவிர, விவசாயிகளைச் அது சென்றடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முல்லைப் பெரியாறு அணையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அளவான 142 அடி உயரத்திற்கு நீரை இந்த ஆண்டு தேக்க முடிந்தது என்று குறிப்பிட்டு, 152 அடியை எய்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கேரள அரசு மரங்களை வெட்ட அளித்த அனுமதியை திரும்பப் பெற்றுக் கொண்டது குறித்து இந்த ஆளுநர் உரையில் எதையுமே குறிப்பிடவில்லை என்பதைப் பார்க்கும்போது உறுதியான முடிவை திமுக அரசு எடுக்காது என்பது தெள்ளத் தெளிவாகிறது. சென்ற ஆளுநர் உரையில் கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட நமது மீனவர் சமூகத்தின் நலன்களை இந்த அரசு பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஆளுநர் உரையில் கச்சத்தீவு என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. அப்படியென்றால் அந்த முயற்சியை திமுக அரசு கைவிட்டுவிட்டது என்பதுதான் பொருள். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் அவர்களை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விடுவிக்காதது திமுக அரசின் திறமையின்மையைத்தான் காட்டுகிறது. தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றிட இந்த அரசு உறுதியாக உள்ளதாகவும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடிகளைக் களையப் போவதாகவும் ஆளுநர் உரையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சிறு தொழிலதிபர்கள் திமுகவினரால் மிரட்டப்படும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கும் ஆளுநர் உரையில் பெற்றுள்ளது வியப்பாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வு ரத்து குறித்து நீட்டி முழக்கிய திமுக, சென்ற ஆளுநர் உரையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி, அத்தகைய சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற, உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு ஆளுநர் உரையில் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றன என்ற இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆளுநர் உரையில் இதுவும் இடம் பெறாது.

ஆக நீட் தேர்வு ரத்து என்பது ஒரு ஏமாற்று வேலை என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. சென்ற ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திடல், தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வலியுறுத்துதல், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல பொருட்கள் இந்த ஆளுநர் உரையில் இடம்பெறாதது இந்த அரசு அவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஏழு பேர் விடுதலை குறித்து பேச்சு மூச்சு இல்லை. கல்விக் கடன் ரத்து, மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை மாதம் ஒருமுறை மின் கட்டணம், நியாய விலைக் கடைகளில் கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு, முதியோர் உதவித் தொகை உயர்வு, மூன்றரை இலட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவது, இரண்டு இலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற முக்கியமான வாக்குறுதிகள் குறித்து, திமுக ஆட்சி வருவதற்கு அடித்தளமாக இருந்த வாக்குறுதிகள் குறித்து ஆளுநர் உரையில் எதுவும் தெரிவிக்கப்படாதது மக்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆளுநர் உரையில் வரவேற்கத் தகுந்த ஒரே ஒரு அம்சம் - என்னவென்றால், சென்ற ஆளுநர் உரையில் ஒன்றிய என்ற வார்த்தை 28 இடங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த வார்த்தை தற்போதைய ஆளுநர் உரையில் ஒரே ஒரு இடத்தில்தான் இடம்பெற்றிருக்கிறது. அடுத்த ஆளுநர் உரையில் இந்த வார்த்தை இடம் பெறாது என நம்புவோம். இதேபோல், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை சென்ற முறைபோல இந்த ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்றாலும், அந்த வார்த்தையைச் சொல்லித்தான் ஆளுநர் தனது உரையை முடித்து இருக்கிறார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வருங்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையில்லாத, எதிர்காலத் தலைமுறையைப் பற்றிச் சிந்திக்காத, எதற்கும் உதவாத கட்டுக் கதைகளின் கூட்டுத் தொகுப்புதான் இந்த ஆளுநர் உரை என்று தெரிவித்துள்ளார்.

click me!