ஆசை இருக்கு..! ஆனால் ஆள் இல்லையே? குழப்பத்தில் ஓபிஎஸ் கேம்ப்..! உற்சாகத்தில் இபிஎஸ் கேம்ப்..!

By Selva KathirFirst Published Jun 12, 2021, 12:00 PM IST
Highlights

எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி தனக்கு தேவையில்லை என்கிற முடிவிற்கு வந்துவிட்டாலும் அந்த பதவிக்கு தன்னிடம் சரியான நபர் இல்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓபிஎஸ் குழப்பம் அடைந்துள்ளார்.

எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி தனக்கு தேவையில்லை என்கிற முடிவிற்கு வந்துவிட்டாலும் அந்த பதவிக்கு தன்னிடம் சரியான நபர் இல்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓபிஎஸ் குழப்பம் அடைந்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் முடிந்து சில நாட்களிலேயே எதிர்கட்சித்  தலைவர் பதவியை கச்சிதமாக காய் நகர்த்தி எடப்பாடி பழனிசாமி தன் வசமாக்கிக் கொண்டார். எவ்வளவோ முயன்றும் ஓபிஎஸ்சால் எதிர்கட்சித்தலைவர் பதவியை பெற முடியவில்லை. இதற்கு மிக முக்கிய காரணம் எம்எல்ஏக்கள் மிகப்பெரும்பான்மையாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக இருப்பது தான். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பும் சரி பின்னரும் சரி அதிமுகவை வழிநடத்த சரியான நபர் தான் தான் என்பதை எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது நிரூபித்து வந்ததால் எம்எல்ஏக்கள் எவ்வித தயக்கமும் இன்றி எடப்பாடியை ஆதரிக்கின்றனர்.

அதே சமயம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சொல்லி வைத்தாற்போல் சட்டப்பேரவை தேர்தலில் ஒட்டு மொத்தமாக தோல்வியை தழுவினர். மனோஜ் பாண்டியன் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி ஓபிஎஸ் ஆதரவாளர்களில் வெற்றி பெற்றவர். கே.பி.முனுசாமியும் எம்எல்ஏவாகியிருந்தாலும் கூட அவர் தற்போது ஓபிஎஸ்சை மீறி அரசியல் செய்து வருவதால் அவரை ஓபிஎஸ் ஆதரவாளர் என்று கூற முடியாது என்கிறார்கள். மேலும் ஓபிஎஸ்சுடன் காட்டும் அதே அளவிலான நெருக்கத்தை எடப்பாடியுடனும் கே.பி.முனுசாமி காட்டி வருகிறார். இதனால் தான் அவரால் மாநிலங்களவை எம்பி ஆக முடிந்தது, தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற முடிந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்சை தேடிச் சென்று சந்தித்தார். சென்னை ரேடிசன் புளு நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ்சை எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்கும் படி எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு அப்போது எதுவும் பதில் அளிக்காத ஓபிஎஸ், தற்போது துணைத் தலைவர் பதவியில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். அப்படி என்றால் துணைத் தலைவர் பதவிக்கு தனது தேர்வாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனை எடப்பாடி பழனிசாமி தயார் படுத்தி வருவதாக கூறுகிறார்கள்.

ஆனால் இதில் ஓபிஎஸ் உடன்பட மறுப்பதாகவும் தனது ஆதரவாளர் ஒருவரை எதிர்கட்சி துணைத் தலைவராக்க அவர் முயற்சிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்கும் அளவிற்கு ஓபிஎஸ் தரப்பிடம் சீனியர் எம்எல்ஏ இல்லை என்கிறார்கள். அவரிடம் இருக்கும் ஒரே சாய்ஸ் கே.பி.முனுசாமி அல்லது மனோஜ் பாண்டியன் தான் என்று சொல்கிறார்கள். ஆனால் கே.பி.முனுசாமி துணைத் தலைவர் பதவியை பெற ஓபிஎஸ் அனுமதிக்கமாட்டார் என்கிறார்கள். அதே போல் மனோஜ் பாண்டியன் போன்ற ஜூனியர்களுக்கு எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி இல்லை என்பதில் எடப்பாடி உறுதியுடன் உள்ளதாக சொல்கிறார்கள்.

இதனால் யாரை துணைத் தலைவர் ஆக்குவது என்கிற குழப்பத்தில் ஓபிஎஸ் இருப்பதாக சொல்கிறார்கள். அதோவது துணைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க எடப்பாடி பழனிசாமி முன்வந்தும், அதற்கு சரியான ஆதரவாளர் இல்லாமல் தவிக்கும் நிலையில் ஓபிஎஸ் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் ஏற்கவில்லை என்றால் தனது விருப்பப்படி கே.பி.அன்பழகனை அந்த பதவியில் அமர்த்தும் முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறுகிறார்கள். இதே போல் துணைத் தலைவர் பதவியை கொடுக்க முன்வந்தும் சரியான ஆள் இல்லாத காரணத்தினால் எதிர்கட்சி கொறடா பதவியையும் ஓபிஎஸ் தரப்பிற்கு இபிஎஸ் விட்டுத்தராமல் வைத்திலிங்கத்தை அந்த பதவிக்கு கொண்டு வரலாம் என்கிறார்கள்.

அதே சமயம் எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியை பெற முடியவில்லை என்றால் கொறடா பதவியை தனது ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு பெற்றுத் தர ஓபிஎஸ் முயல்வார் என்கிறார்கள். ஆனால் எது எப்படியாக இருந்தாலும் எதிர்கட்சி துணைத் தலைவர், கொறடா போன்ற பதவிகளில் எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்தை மீறி எதுவும் நடக்காது என்கிறார்கள் அதிமுக மேல் மட்ட நிர்வாகிகள் வட்டாரத்தில்.

click me!