
அதிமுகவில் சசிகலா தலைமை ஏற்கவேண்டும் தேனி மாவட்ட நிர்வாகிகள் சார்பாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், பல்வேறு மாவட்ட அதிமுகவினரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தென் மாவட்டங்களில் சுற்றுபயணம் செய்து வருகின்ற சசிகலாவை ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது. இந்த சந்திப்பின்போது தேனி மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதனையடுத்து எந்த நேரமும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் இதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
தற்போது அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் அதிமுகவிற்கு கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ.ராஜா, தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் வைகை.கருப்புஜி, கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் சேதுபதி ஆகியோரை இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் அதிர்ச்சி அளித்துள்ளது. ஏற்கனவே சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதிமுக தேனி மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்த காரணத்தால் ஓபிஎஸ் சகோதரர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் சசிகலாவின் ரி-என்ட்ரி கேள்விக்குறியாக மாறியுள்ளது