
அடுத்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கண்டிப்பாக தோல்வியை தழுவுவார்கள் என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பன்னீர்செல்வம், தலைமையில் தனி அணி செயல்பட்டது. சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பன்னீர்செல்வம் அணி வலியுறுத்தியது.
இதையடுத்து பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணி ஒன்றாக இணைந்து சசிகலா மற்றும் தினகரனை ஓரங்கட்டினர். பின்னர் இரட்டை இலையையும் மீட்டெடுத்தனர்.
இரட்டை இலையை பெற்ற நிலையிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது. ஆர்.கே.நகர் வெற்றி தினகரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உற்சாகத்தை வழங்கியுள்ளது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவை எதிர்த்து செயல்பட்ட பன்னீர்செல்வத்தை இணைத்துக்கொண்டு அவருடன் பழனிசாமி கைகுலுக்கியதையோ அதிமுகவிற்கு எதிராக செயல்பட்ட பன்னீர்செல்வத்துடன் இணைந்து பாஜகவிற்கு அடிபணிந்து செயல்படுவதையோ மக்கள் விரும்பவில்லை. எனவேதான் ஆர்.கே.நகரில் அவர்களுக்கு மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்திருக்கிறார்கள்.
அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் கூட பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அவர்கள் போட்டியிடும் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவுவார்கள். அவர்கள் இணைந்ததையும் பாஜகவின் காலில் விழுந்து காவடி தூக்குவதையும் மக்கள் விரும்பவில்லை என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.