
ரஜினி அரசியலுக்கு வருவதை மக்களும், அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளும் அரசியல் தலைவர்கள் சிலரும் வரவேற்பது இருக்கட்டும். அவர் சார்ந்த சினிமா துறையினர் இதை எப்படி பார்க்கிறார்கள், எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது முக்கியமல்லவா.
காமெடி நடிகர் விவேக் வரவேற்றிருக்கிறார், கஸ்தூரி வரவேற்பது போல் ஒரு பஞ்ச் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் வித்தியாசமான கதை களங்களை எடுத்து களமாடும் இயக்குநர் சுசி.கணேசன் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசுகையில்...
“ரஜினி சார் இங்கே சிஸ்டம் சரியில்லை என்று சொல்லியிருக்கிறார். சிஸ்டம் என்றால் அரசியல் மட்டுமில்லை. எல்லா லெவலுமே பிரச்னையாகித்தான் கிடக்கிறது. ஒவ்வொரு தனிமனிதனும் மாறினால்தான் ஒட்டுமொத்த சிஸ்டம் மாறும். அதை அவர் செய்துவிட்டால் பெரும் சாதனைதான்.
அரசியலுக்குக்கு நல்ல புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டிய தேவையிருக்கிறது.
ரஜினியை விமர்சனம் செய்பவர்கள், ’ரஜினி தமிழரில்லை. அவர் ஏன் இங்கே தலைவனாக வேண்டும்?’ என்கிறார்கள். கனடா, அமெரிக்கா என வெளிநாடுகளிலோ, அல்லது இந்தியாவினுள் வேறு மாநிலங்களிலோ தமிழர்கள் மேயராகவோ, கவுன்சிலராகவோ ஆனாலும் கூட அதை கொண்டாடுகிறோம். ‘எங்கே போனாலும் தமிழன் ஜெயிப்பான் டா’ என்கிறோம். அப்படியானால் இங்கே ஏன் பக்கத்து மாநில நபர் வரக்கூடாது? உலகமயமாதலின் மூலம் உலகம் சுருங்கிவிட்டது இந்நிலையில், 40 வருடங்களாக தமிழ்நாட்டில் வாழ்ந்துவிட்ட ரஜினியை தாராளமாக தமிழகராக பார்க்கலாம். அவரது கொள்கையை எதிர்க்கலாமே தவிர இந்த மாதிரியான காரணங்களை கூறி தனிப்பட்ட முறையில் எதிர்க்க கூடாது.” என்றிருக்கிறார்.
யோசிக்க வேண்டிய விஷயம்தான்!
- விஷ்ணு பிரியா