AIADMK : சசிகலா வருகை...டெல்லி உத்தரவு… பரபரக்கும் அதிமுக உட்கட்சி தேர்தல்.. என்ன நடக்கிறது ?

By Raghupati RFirst Published Dec 3, 2021, 9:06 AM IST
Highlights

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் பரபரப்பான சூழ்நிலையில் இன்றுடன் தொடங்குகிறது.

அதிமுகவின்செயற்குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் டிசம்பர் 1 நடைபெற்றது. இதில், மதுசூதனன் மறைவைத் தொடர்ந்து, கட்சியின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 11 தீர்மானங்களுடன் ஒரு சிறப்பு தீர்மானமும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.அதிமுக-வின் சட்ட விதிகளில் 3 திருத்தங்களை செய்வதாக, சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் தேர்வு செய்யும் வகையில், கட்சியின் சட்ட விதி 20 பிரிவு- 2 திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விதியை மட்டும் மாற்றவோ, திருத்தவோ முடியாது என கட்சி சட்ட விதி 43-ஐ திருத்தியுள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் விதிக்கு மட்டும், விலக்கு அளிக்கவோ, தளர்த்தவோ அதிகாரம் இல்லை என, அதிமுக-வின் சட்ட விதி 45-ஐ திருத்தியுள்ளனர்.இந்த மாற்றங்கள் இன்று முதலே அமலுக்கு வருவதாகவும், அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் திருத்தங்களுக்கு ஒப்புதல் பெறப்படும் என்றும் தீர்மானத்தினை நிறைவேற்றினர். 

இதனையொட்டி அதிமுக வெளிட்ட அறிக்கையில், ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு, டிசம்பர் 7ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடக்கும். தேர்தலில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும். கட்சியின் மூத்த தலைவர்களாக பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் அகியோர் தேர்தல் ஆணையர்களாக இருப்பார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வேட்பு மனு தாக்கல் நாளை மாலை 3 மணிக்கு நிறைவடைகிறது. மனுக்கள் 5-ம் தேதி காலை பரிசீலிக்கப்படுகிறது. 6-ம் தேதி மாலை 4 மணிவரை மனுவை திரும்ப பெறலாம். டிசம்பர் 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.

இதன் முடிவு டிசம்பர் 8 அறிவிக்கப்படுகிறது. இதேபோல, தமிழகத்தில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைகழக நிர்வாகிகள், பேரூராட்சி மற்றும் நகர வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 2 கட்டங்களாக நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இரண்டு பதவிகளுக்கும் சேர்த்து இருவரைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என்றால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.சசிகலாவின் வருகை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியதால் தான், உடனே உட்கட்சி தேர்தல் நடத்த ஆயத்தமாகி இருக்கிறது. இதெல்லாம் டெல்லி மேலிட உத்தரவு என்றும், எக்காரணத்தை கொண்டும் அதிமுக இவர்கள் இருவரை தவிர வேறு யாருக்கும் சென்றுவிட கூடாது என்ற நோக்கத்திற்க்காக தான், உடனே தேர்தல் என்று கூறுகின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

click me!